பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. 30 இடங்களை கைப்பற்றும்
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. 30 இடங்களை கைப்பற்றும் என்று மாநில துணைத்தலைவர் நரேந்திரன் கூறினார்.
திருப்பத்துார்
மத்திய பா.ஜ.க. அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க கூட்டம் நேற்று திருப்பத்துார் ஹவுசிங் போர்டு பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். நகர தலைவர் சண்முகம் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் அன்பழகன், ஜி.ஈஸ்வர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நரேந்திரன் கலந்து கொண்டு பேசினார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 8 ஆண்டுகளில் பா.ஜ.க. அரசு செய்த திட்டங்கள், சாதனைகள் குறித்து மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில், மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் சந்திப்பு நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகிறார். ஆனால், தாய்மார்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஒரு சூழல் இன்றைக்கு தமிழ்நாட்டில் உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகி வருகிறது. பல இடங்களில் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதுதான் திராவிட மாடல்.
மோடி அரசின் சாதனைகளை கூறி 2024-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. 30 இடங்களை கைப்பற்றும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுச் செயலாளர்கள் தண்டபாணி, கவியரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைத் தலைவர் பூபதி நன்றி கூறினார்.