திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில்பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டம்
திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில்பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மாதம் 21-ந் தேதி கோவிலுக்கு வந்த பக்தர்களை ரூ.100 கட்டண ரசீதுடன் கோவில் அர்ச்சர்கள் சிவசுப்பிரமணியன், லெட்சுமணன் ஆகியோர் தரிசனத்துக்கு அழைத்து சென்றதாகவும், அப்போது அந்த ரசீது காலாவதியானது என்று கூறி அவர்களை கோவிலில் கைங்கர்யம் செய்ய கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனவும், தற்போது வரை அவர்களை பக்தர்களுக்கு கைங்கர்யம் செய்ய தடைவிதித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும், கோவில் பாதுகாப்பு பணியாளர்கள் கொடுத்த கட்டண ரசீது மூலமே அர்ச்சகர்கள் பக்தர்களை தரிசனத்துக்கு அழைத்து சென்றனர். எனவே அர்ச்சகர்களை கைங்கர்யம் செய்ய அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தை நேற்று பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், பா.ஜ.க. ஆலய மேம்பாட்டுப்பிரிவு மாவட்ட தலைவர் வினோத்சுப்பையன், மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஜெய்ஆனந்த், மாவட்ட துணை தலைவர்கள் சரஸ்வதி, கிருஷ்ணன், பிருத்விராஜன் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உதவி கலெக்டர் குருச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்த்ராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி, உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமச்சந்திரன், துணை தாசில்தார் தங்கமாரியப்பன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இப்பிரச்சனை குறித்து கோவில் இணை ஆணையரிடம் வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.