கிராம சபை கூட்டத்திற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததால் பரபரப்பு


கிராம சபை கூட்டத்திற்கு கருப்பு பேட்ஜ்   அணிந்து வந்ததால் பரபரப்பு
x

கீழ்வணக்கம்பாடி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சிலர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

கீழ்வணக்கம்பாடி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சிலர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நிர்வாக சீர்கேடு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கீழ்வணக்கம்பாடி ஊராட்சி உள்ளது. இதன் ஊராட்சி மன்ற தலைவராக எஸ்.குமார் என்பவர் உள்ளார். இந்த ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதால் ஏரி நீரை பயன்படுத்தும் போது அது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது.

மேலும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியுள்ளது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் சீர்கெட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் அரசு வளர்ச்சி பணி செய்வதற்காக ஒதுக்கப்படும் இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் நிராகரித்துவிட்டு வேறு இடத்தில் தன்னிச்சையாக கால்வாய் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் செய்வதாகவும், தகுதியானவர்களுக்கு அரசு வீடுகள் வழங்குவதை புறக்கணிப்பதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் எடுத்து வைக்கின்றனர். அதிகாரிகள் இதனை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டப்படுகிறது.

கருப்பு பேட்ஜ்

இந்த நிலையில் கிராம சபை கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கியது. அப்போது கீழ்வணக்கம்பாடி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஒரு சிலர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தனர். அப்போது அவர்கள், ஊராட்சி மன்ற தலைவர் பதவி விலக வேண்டும் என்று கூச்சல் போட்டனர்.

கருப்பு பேட்ஜ் அணிந்து வந்தவர்கள் ஊராட்சி மன்றத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் தீர்மானங்களாக நிறைவேற்றப்படுவதில்லை என்று குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி பேசினர். இதனால் கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் தொடர்ந்து கிராம சபை கூட்டத்தை நடத்த முடியவில்லை. அதைத் தொடர்ந்து கருப்பு பேட்ஜ் அணிந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாமலை, தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து கிராம சபை கூட்டம் பகல் ஒரு மணி அளவில் முடிவடைந்தது.

கால்வாய் பணி

இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவனிடம் கேட்டபோது, தற்போது தான் ஊராட்சிகளுக்கு நிதி வந்துள்ளது. படிப்படியாக பொதுமக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும். ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்தில் கால்வாய் பணி நடைபெறுவது உண்மை.

அதை நிறுத்திவிட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ள இடத்தில் கால்வாய் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு நபருக்கு வீடு வழங்காமல் விடுபட்டுள்ளது. அதனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்ட போது பிரச்சினை ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றார்.


Next Story