படகுகளில் கருப்புக்கொடி கட்டிகடலில் மீனவர்கள் போராட்டம்


தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி நேற்று படகுகளில் கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு பாலத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி நேற்று படகுகளில் கருப்புக்கொடி கட்டி மீனவர்கள் கடலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூண்டில் வளைவு பாலம்

திருச்செந்தூர் நகராட்சி அமலிநகரில் கடல் அரிப்பு ஏற்படுவதால் மீனவர்கள் படகுகளை கடற்கரையில் நிறுத்தவும், கடலுக்கு செல்லவும் சிரமப்படுகின்றனர்.

எனவே, அங்கு தூண்டில் வளைவு பாலம் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் மீன்வளத்துறை மானிய கோரிக்கையின்போது, திருச்செந்தூர் அமலிநகரில் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஓராண்டாகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.

மனித சங்கிலி

இதையடுத்து திருச்செந்தூர் அமலிநகரில் நேற்றுமுன்தினம் முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நேற்று அவர்கள் குடும்பத்தினருடன் கடற்கரையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கருப்புக்கொடி கட்டிய படகுகளில் கடலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சுமார் 3 மணி நேரம் நடந்த போராட்டத்திற்கு பின்னர் திருச்செந்தூர் உதவி கலெக்டர் புகாரி தலைமையில் அதிகரிகள் நேரில் வந்து மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் சுவாமிநாதன், தூத்துக்குடி மண்டல மீன்வளத்துறை இணை இயக்குனர் அமல்சேவியர், உதவி இயக்குனர் விஜயராகவன், மீன்பிடி துறைமுக செயற்பொறியாளர் சரவணகுமார், உதவி செயற்பொறியாளர் ரவி, அமலிநகர் பங்கு தந்தை வில்லியம் சந்தானம் மற்றும் ஊர் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஊர்மக்கள் கலந்து கொண்டனர்.

சமாதானத்தை ஏற்க மறுப்பு

இதில் அதிகாரிகள் கூறிய சமாதானத்தை மீனவர்கள் ஏற்கவில்லை. அதேசமயம், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தூண்டில் வளைவு பாலம் பணிகள் தொடங்கும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமாட்டோம் என மீனவர்கள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

அப்போது, மாவட்ட கலெக்டரை ஊர்கமிட்டி நிர்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்வதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஊர் கமிட்டி கூட்டத்திற்கு பின்னர் கலெக்டரை சந்திப்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என மீனவர்கள் கூறினர். பின்னர் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். நேற்று 2-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.


Next Story