உளுந்து அறுவடை பணிகள் தீவிரம்
தஞ்சை அருகே அறுவடை செய்யப்பட்ட உளுந்து பயிர்களை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
வல்லம்;
தஞ்சை அருகே அறுவடை செய்யப்பட்ட உளுந்து பயிர்களை காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
உளுந்து சாகுபடி
தஞ்சை மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் சாகுபடி செய்யப்படுவது வழக்கம். நடப்பாண்டு வழக்கம் போல கடந்த ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே கோடை உழவாக தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. புரதச்சத்து மிகுந்த உளுந்து, குறுகிய காலத்தில், மிகக்குறைந்த செலவில் விவசாயிகளுக்கு அதிக லாபத்தை அளிக்கும் பயிராக உள்ளது. விதைப்பு செய்த 65 முதல் 75 நாட்களுக்குள் செடிகளில் உள்ள காய்கள் நன்கு முற்றி காய்ந்தவுடன் அறுவடை செய்யப்படும்.
காய வைக்கும் பணி
தஞ்சை அருகே ரெட்டிப்பாளையம் பகுதியில் விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்திருந்த உளுந்தை அறுவடை செய்து வருகின்றனர். மேலும் அறுவடை செய்யப்பட்ட உளுந்து செடிகளை திருவையாறு பைபாஸ் சாலையில் காயவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:-
உளுந்து பயிரில் சாகுபடி செலவுகளை விட கூடுதல் லாபமும் கிடைக்கும். சரியான முறையில் சாகுபடியை மேற்கொண்டால் லாபம் கிடைக்கும். அதிபட்சம் 80 நாட்களுக்குள் அறுவடையை முடித்து விடலாம். அறுவடை முடித்து தற்போது செடிகளை காயவைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு விளைச்சலும் நன்கு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.