உடன்குடி பகுதியில் கருப்பட்டி விலை `கிடுகிடு' உயர்வு கிலோவுக்கு ரூ.40 வரை அதிகரித்து விற்பனை


உடன்குடி பகுதியில்  கருப்பட்டி விலை `கிடுகிடு உயர்வு  கிலோவுக்கு ரூ.40 வரை அதிகரித்து விற்பனை
x

உடன்குடி பகுதியில் கருப்பட்டி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ கருப்பட்டி விலை ரூ.200-ல் இருந்து ரூ.240-க்கு விற்கப்பட்டது

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பகுதியில் கருப்பட்டி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ கருப்பட்டி விலை ரூ.200-ல் இருந்து ரூ.240-க்கு விற்கப்பட்டது.

கருப்பட்டி உற்பத்தி

உடன்குடி வட்டார பகுதியில் தற்போது கருப்பட்டி உற்பத்தி தீவிரமாக நடந்து வருகிறது. செட்டியாபத்து, மாதவன்குறிச்சி, ஆதியாகுறிச்சி, லட்சுமிபுரம், நங்கைமொழி, குதிரைமொழி, பரமன்குறிச்சி வெள்ளாளன்விளை, மாநாடு, தண்டுபத்து, நயினார்பத்து, குலசேகரன்பட்டினம் ஆகிய ஊராட்சி மன்ற பகுதிகளில் உள்ள சுமார் 50 கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனைமரத்தில் பதனீர் எடுத்து அதை பக்குவப்படுத்தி காய்ச்சி குடிசை தொழிலாக கருப்பட்டியும், பனங்கற்கண்டும் உற்பத்தி செய்து வருகின்றனர்.

விலை உயர்வு

இங்கு உற்பத்தியாகும் கருப்பட்டி தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் `உடன்குடி கருப்பட்டி' என்று ஊர் பெயரோடு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது ஏராளமான வியாபாரிகள் உடன்குடிக்கு வந்து தங்கியிருந்து புது கருப்பட்டி தயாராகும் இடத்திற்கு சென்று கொள்முதல் செய்து வருகின்றனர்.

முன்பு ஒரு கிலோ ரூ.200-க்கு கொள்முதல் செய்யப்பட்ட கருப்பட்டி கிடுகிடுவென விலை உயர்ந்து வருகிறது.

நேற்று ஒரு கிலோ ரூ.240 வரை மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டது.

வியாபாரிகள் முகாம்

இதுகுறித்து உடன்குடியில் முகாமிட்டுள்ள வியாபாரி ஒருவர் கூறுகையில், உடன்குடி கருப்பட்டி மருத்துவ குணமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டதாகும். இதில் எந்த கலப்படமும் இல்லாமல் ஒரிஜினலாக வாங்குவதற்காகவே நாங்கள் இங்கு முகாமிட்டு உள்ளோம்.

தற்போது கருப்பட்டி விலை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரு கிலோ கருப்பட்டி ரூ.280 வரை சில்லறைக்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோ ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட பழைய கருப்பட்டி ரூ.380-க்கு விற்பனை செய்யபடுகிறது' என்றார்.


Next Story