உடன்குடி பகுதியில் கருப்பட்டி உற்பத்தி கடும் பாதிப்பு


உடன்குடி பகுதியில் கருப்பட்டி உற்பத்தி கடும் பாதிப்பு
x

உடன்குடி பகுதியில் சூறைக்காற்று வீசி வருவதால் கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முருங்கை விளைச்சல் பாதிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருவதால் பதநீர் வீணாகி வருவதால், கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முருங்கை விளைச்சலும் பாதிக்கப்பட்டு இருப்பதால், அந்த விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர்.

வீணாகும் பதநீர்

உடன்குடி பகுதியில் பனை மரங்களில் பதநீர் சீசன் தொடங்கி, நடந்து வருகிறது. இதனால் பதநீர் விற்பனை அமோகமாக நடந்து வருவதுடன், கருப்பட்டி உற்பத்தியும் அதிகரித்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆடி மாதத்துக்கு முன்பாக சூறைக்காற்று காற்று வீசி வருகிறது. இதனால் பனை மரங்களில் ஏறி பதநீர் தரும் பாளையை சீவிவரும் தொழிலாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

சிரமத்திற்கு இடையே மரத்தில் ஏறி பாளைகளை சீவிவிட்டு வந்தாலும், பலத்த காற்று வீசுவதால் மரம் பலமாக அசைந்தாடுவதால், பதநீர் கலசத்திற்குள் விழாமல் பெரும்பாலும் கீழே கொட்டி வீணாகிவருகின்றன. இதனால் பதநீர் கலசத்தில் எஞ்சியிருக்கும் மிக குறைவான பதநீரை தொழிலாளர்கள் இறக்கி வரும் நிலை உருவாகி உள்ளது.

கருப்பட்டி உற்பத்தி பாதிப்பு

பதநீர் மிக குறைவாக கிடைத்து வருவதால் கருப்பட்டி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாக, உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருப்பட்டி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ஆனி மாதத்தில் பனை மரத்தில் பதநீர் உற்பத்தி அதிகமாக கிடைக்கும். இந்த மாதத்தில் உடன்குடி சுற்றுவட்டாரத்திலுள்ள பல்லாயிரக்கணக்கான பனைகள் மூலம் பதநீர் இறக்கப்பட்டு, கருப்பட்டி உற்பத்தி பெருமளவில் நடைபெறும். இங்கிருந்து வெளி மாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு கருப்பட்டி உற்பத்தி விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். தற்போது ஆடி மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே, பலத்த காற்றால் பனையில் உற்பத்தியாகும் பதநீர் பெருமளவில் வீணாகி, கருப்பட்டி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது' என வேதனை தெரிவித்தனர்.

முருங்கை விவசாயிகள் கவலை

இதேபோன்று குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் முருங்கை விவசாயத்தில் முருங்கைப்பூக்கள் பலத்த காற்று வீசி வருவதால், காய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் முருங்கை மரங்களின் பெரும்பகுதி முறிந்து வீணாகி வருகிறது. இதனால் முருங்கை விளைச்சலும் பாதிக்கப்பட்டு, அந்த விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story