இந்திய சாதனை புத்தகத்தில் கொடைக்கானல் மாணவனுக்கு பாராட்டு
இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொடைக்கானல் மாணவனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியை சேர்ந்த சுஜித்-பிரபா தம்பதியின் மகன் கைரவ் கிரிஷ் (வயது 9). இவர் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் என்ற 4-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் கொடைக்கானலில் செயல்பட்டு வரும் வீர ஆஞ்சநேயர் சிலம்பக்கூடத்தில் சிலம்பாட்டம் பயின்று வருகிறார்.
இந்தநிலையில் கைரவ் கிரிஷ், சிலம்பாட்டத்தில் ஒரு கை சிலம்பம், இரண்டு கை சிலம்பம், ஒற்றை சுழல், இரட்டை சுழல், பிச்சுவா கத்தி, வாள்-கேடயம், மான் கொம்பு, வாள் வீச்சு உள்ளிட்ட 16 வகையான போர் ஆயுதங்களை பயன்படுத்தி 15 நிமிடத்தில் செயல்முறை பயிற்சி செய்தார். பின்னர் செயல்முறை பயிற்சி பற்றிய வீடியோவை 'இந்தியா புக் ஆப் ரெக்கார்டஸ்' என்ற சாதனை பதிவு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார்.
இதைத்தொடர்ந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் கைரவ் கிரிஷ் செய்த செயல்முறை பயிற்சியை அங்கீகரித்து, அவருக்கு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கியுள்ளது. இதையடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த மாணவரை சிலம்பக்கூட நிர்வாகிகள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி நினைவு பரிசுகளை வழங்கினர்.