வக்கீலின் காரை மறித்து டிரைவருக்கு சரமாரி வெட்டு


வக்கீலின் காரை மறித்து டிரைவருக்கு சரமாரி வெட்டு
x

பள்ளிகொண்டா அருகே வக்கீலின் காரை மறித்து டிரைவரை சரமாரியாக வெட்டிய ஆட்டோ டிரைவர்உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர்

ஜாமீனில் வந்தார்

பள்ளி கொண்டாவை அடுத்த வெட்டுவானம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் விஜய் (வயது 36 ). வக்கீல் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருகின்றார். விஜயின் உறவினரான ராஜ்குமார் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தினமும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

20 நாட்களாக இவர் கையெழுத்து போட அலுவலகம் செல்லாததால் பள்ளிகொண்டா போலீசார் நேற்று முன்தினம் ராஜ்குமார் ஓட்டிச் சென்ற ஆட்டோவை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

வக்கீல்

ஆட்டோ டிரைவர் பழனி சொல்லித்தான் போலீசார் தனது ஆட்டோவை பறிமுதல் செய்ததாக எண்ணி பழனியை கொலை செய்வதற்காக முயற்சிகள் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆத்திரம் தாங்க முடியாத ராஜ்குமார் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு வெட்டுவானம் அம்பேத்கர் நகருக்கு வரும்போது, அம்பேத்கர் சிலை அருகே நின்று கொண்டிருந்த முன்னாள் கவுன்சிலர் பன்னீரை, ராஜ்குமார் தாக்கி உள்ளார். இதனால் ராஜ்குமார் மீது புகார் கொடுக்க பன்னீர் தரப்பினர் இரவு 10 மணிக்கு பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

இந்த நிலையில் பன்னீருடைய மகன் சுதர்சன் மற்றும் அவரது ஆதரவாளர் பரத் ஆகியோர் கடந்த ஆண்டு நடந்த திருவிழாவின் போதும், நேற்றும் தனது தந்தையை ராஜ்குமார் தாக்கியுள்ளார் என்ற கோபத்திலும், பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவரை ஈசியாக ஜாமீனில் விஜய் எடுத்து விடுகிறார் என்ற கோபத்திலும் விஜயை தீர்த்து கட்ட வேண்டும் என சுதர்சன் எண்ணியதாக கூறப்படுகிறது.

டிரைவருக்கு சரமாரி வெட்டு

நேற்று காலை 8.30 மணிக்கு வழக்கம் போல் விஜய், வழக்கறிஞரை அழைத்து செல்வதற்காக காரை எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்து புறப்பட்டார். அப்போது அங்கிருந்த ஒரு வளைவில் தயாராக இருந்த சுதர்சன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சுமார் 5 பேர் காரை மறித்து கண்ணாடிகளை உடைத்து, காரில் இருந்த விஜயை கழுத்து, தலை உள்ளிட்ட பகுதிகளில் கத்தி மற்றும் இரும்பு ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதுபற்றி .தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரை வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

5 பேர் கைது

தகவல் அறிந்ததும் வேலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் பழனிமுத்து, தனி படை போலீசாருடன் சென்று 6 மணி நேரத்தில் நேற்று பகல் 1.30 மணிக்கு வெட்டுவானம் பாலாற்றங்கரையில் பதுங்கியிருந்த 5 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

மேலும் விஜயின் தாயார் மித்ரா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வெட்டுவானம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த பழனி, பன்னு என்கின்ற சரத்குமார், பன்னீர் மகன் சுதர்சன், மற்றும் பரத், ஜெயபிரகாஷ் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அங்கு கோஷ்டி மோதல் ஏற்படாதவாறு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story