கோவில்களில் நடைஅடைப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று கோவில்களில் நடை சாத்தப்பட்டது.
சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று கோவில்களில் நடை சாத்தப்பட்டது.
சமயபுரம்
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் நடை வழக்கமாக அதிகாலை 5. 30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை அம்மனை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இந்நிலையில் நேற்று மதியம் 2.39 மணி முதல் 6.26 மணி வரை சந்திர கிரகணம் ஏற்பட்டது. இந்நிலையில் வழக்கமாக அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சிக்கால பூஜை வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து 12.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை நடை சாத்தப்பட்டது. பின்னர் புண்ணியாக வாசனம் செய்யப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து அம்மனை தரிசனம் செய்ய இரவு 9.30 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்குள் சென்று நீண்ட வரிசையில் நின்று அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
மலைக்கோட்டை
திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் நேற்று சந்திர கிரகணத்தையொட்டி பகல் 12 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. இதைடுத்து சந்திர கிரகணம் முடிந்த பிறகு இரவு 7 மணிக்கு மேல் கோவில் நடை திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதற்காக மலை உச்சியில் உள்ள உச்சிப்பிள்ளையார், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகர், மலையின் நடுபகுதியில் உள்ள தாயுமான சுவாமி, மட்டுவார் குழலம்மை சன்னதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்
சந்திர கிரகணத்தையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நேற்று காலை 6.45 மணிமுதல் காலை 8 மணி வரையிலும், காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பகல் 12.30 மணிமுதல் இரவு 8 மணி வரை மூலவர் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பிற சன்னதிகளும் நடை அடைக்கப்பட்டது.
திருவானைக்காவல்
சந்திர கிரகண திருமஞ்சனத்தையொட்டி நம்பெருமான் மூலஸ்தானத்திலிருந்து மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு சந்தன மண்டபத்திற்கு மதியம் 2 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு மதியம் 3 மணி முதல் மாலை 6.15 மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் சந்தனு மண்டபத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு நம்பெருமாள் இரவு 7.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோவிலில் காலை, உச்சிகால பூஜை, பவுர்ணமி பூஜை முடித்து பின்னர் பகல் 1 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடை அடைக்கப்பட்டது. பரிகார பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் நடை திறக்கப்பட்டது.