தேன் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் முற்றுகை போராட்டம்


தேன் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேன் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்கள் முற்றுகை போராட்டம்

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் தேனீ வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் வெட்டுமணியில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்தில் ஏராளமான உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் சீசன்போது ஏராளமான தேன் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படும். ஆனால் இந்த ஆண்டு குறிப்பிட்ட அளவு தேன் கொள்முதல் செய்யாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கூட்டுறவு சங்கம் சார்பில் தேன் கொள்முதலை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இதையறிந்த அறிந்த உறுப்பினர்கள் நேற்று மார்த்தாண்டம் வெட்டுமணியில் உள்ள தேனீ வளர்ப்பு கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சங்க உறுப்பினர் ஸ்டீபன்சன் கூறுகையில், சங்கத்தில் 1370 உறுப்பினர்கள் உள்ளனர். ஆண்டுதோறும் சங்கம் மூலம் 4 லட்சம் கிலோ தேன் கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்படும் தேனை சேகரித்து வைப்பதற்கான பெரிய கிட்டங்கியும் உள்ளது. ஆனால் இந்த ஆண்டு சுமார் 3 லட்சம் கிலோ தேன் மட்டுமே கொள்முதல் செய்துவிட்டு, கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், தேனீ வளர்ப்போர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தேன் கொள்முதல் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து தேன் கொள்முதல் செய்யாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story