விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம்
கடையநல்லூரில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அச்சன்புதூர்:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கடையநல்லூரில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளா் முத்துசாமி தலைமை தாங்கினார். கடையநல்லூர் வட்டாரச் செயலாளர் சம்சுதீன், நகர செயலாளர் காஜாமைதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தென்காசி மாவட்ட செயலாளர் இசக்கிதுரை தொடக்க உரையாற்றினார்.
கடையநல்லூர் நகர் முழுவதும் தாமிரபரணி குடிநீர் தண்ணீரை எல்லாம் வார்டுகளுக்கும் முறையாக வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் இரவு நேர மருத்துவர்களை நியமிப்பதுடன் டாக்டர்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும். கடையநல்லூர் தலைமை தபால் நிலையத்திற்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள காலி இடத்தில் உடனடியாக தபால் நிலையம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அரசு மருத்துவமனை அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் நலன் கருதி சுகாதார வளாகம் கட்ட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
இதில் கட்சி நிர்வாகிகள் கணேசன், அருணாசலம், செய்யது அலி, முகமது இப்ராஹிம், ராமையா, நாகராஜன், கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்