3 முக்கியமான ரத்தக்குழாய்களில் அடைப்பு: செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரை


3 முக்கியமான ரத்தக்குழாய்களில் அடைப்பு: செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரை
x

3 முக்கியமான ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவைசிகிச்சை செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சென்னை,

தமிழக மின்சாரத்துறை மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறையினர் காரில் அழைத்துச் செல்ல முயன்ற நேரத்தில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது.

அதையடுத்து ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் காட்டுத்தீ போல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரி முன்பு தி.மு.க. தொண்டர்கள் குவிந்தனர். அவர் சிகிச்சை பெறும் வார்டு முன்பு துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

பைபாஸ் அறுவைசிகிச்சை

அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், வேலு ஆகியோர் அதிகாலையில் ஆஸ்பத்திரிக்கு வந்து டாக்டர்களிடம் செந்தில் பாலாஜியின் நலம் குறித்து விசாரித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவரும் முறை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் டாக்டர்கள் விளக்கி கூறினார்கள்.

இந்த நிலையில் காலையில், இதய ரத்தநாள பரிசோதனை என்று சொல்லப்படும் ஆஞ்சியோ பரிசோதனை செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட்டது. இந்த பரிசோதனையில் அவருக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு ஆஸ்பத்திரி இயக்குனரகம் வெளியிட்டுள்ள மருத்துவ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு (வயது 47) இதய ரத்தநாள பரிசோதனை காலை 10.45 மணிக்கு செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு 3 முக்கியமான ரத்தக்குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பைபாஸ் அறுவைசிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கோர்ட்டில் வக்கீல்கள் குவிந்ததால் பரபரப்பு

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை செசன்ஸ் கோர்ட்டில் சுமார் 1¼ மணி நேரம் நடந்தது. இந்த விசாரணையை பார்ப்பதற்காக கோர்ட்டில் ஏராளமான வக்கீல்கள் குவிந்தனர். அதேபோன்று அமலாக்கத்துறை அதிகாரிகளும் கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.


Next Story