பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு
ஊட்டியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஊட்டி
ஊட்டியில் பாதாள சாக்கடை குழாய்களில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
வழிந்தோடும் கழிவுநீர்
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இங்கு 1 லட்சத்து 27 ஆயிரத்து 540 பேர் வசித்து வருகின்றனர். மேலும் 500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. தற்போது ஊட்டியில் கோடை சீசன் நடந்து வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளதால், ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது.
குறிப்பாக ஊட்டி-குன்னூர் தேசிய நெடுஞ்சாலை சேரிங்கிராஸ் பகுதியில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் அடைப்பு ஏற்படுகிறது. நேற்று முன்தினம் எட்டின்ஸ் சாலையில் அடைப்பு ஏற்பட்டது. இதேபோல் ரெயில் நிலையம் மற்றும் 30-க்கும் மேற்பட்ட வார்டுகளிலும் இதே பிரச்சினை தான் உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வரும் போது, போக்குவரத்தை நிறுத்தி சாக்கடை குழாய் அடைப்பை சரிசெய்யும் பணி நடந்து வருகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பவதால், சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
நிரந்தர தீர்வு
ஊட்டியில் மழை பெய்யும் நேரத்தில் பாதாள சாக்கடை குழாய்களில் அவ்வப்போது அடைப்பு ஏற்பட்டு, சாலையில் கழிவுநீர் வழிந்தோடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாதாள சாக்கடை அடைப்பு சீரமைக்கப்பட்டாலும், மீண்டும் மீண்டும் அடைப்பு ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்ட அமைப்பை மாற்றி, தற்போது நகரில் உள்ள பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையை பொருத்து புதிய திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.