காரை குறுக்கே நிறுத்தி 4 வழிச்சாலையில் மறியல்


காரை குறுக்கே நிறுத்தி 4 வழிச்சாலையில் மறியல்
x

வேடசந்தூர் அருகே காரை குறுக்கே நிறுத்தி 4 வழிச்சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

வேடசந்தூர் அருகே வி.புதுக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம், முதலியார்பட்டி. திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் இருந்து இணைப்பு சாலை முதலியார்பட்டிக்கு செல்கிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நான்கு வழிச்சாலையில் இருந்து முதலியார்பட்டிக்கு செல்லும் சாலையை துண்டிப்பு செய்து, குழி தோண்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கிராம மக்கள் கேட்டபோது, சாக்கடை கால்வாய் அமைக்கவுள்ளதாக நான்கு வழிச்சாலை அமைக்கும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர். ஆனால் இதனை ஏற்காத கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமியிடம் முறையிட்டனர்.

இதையடுத்து நேற்று ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலை பகுதிக்கு வந்தனர். அப்போது சாலையின் குறுக்கே காரை நிறுத்தி, அவர்கள் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story