ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், கொழுப்பை பரிசோதிக்க வேண்டும்; டீன் பிரின்ஸ் பயஸ் தகவல்
ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவை பரிசோதிக்க வேண்டும் என ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்,
ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், கொழுப்பின் அளவை பரிசோதிக்க வேண்டும் என ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
உலக இதயநோய் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் இதய நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவக்கல்லூரி டீன் பிரின்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். இதயவியல் துறைத்தலைவர் முரளீதரன், உதவி பேராசிரியர் ஹனுஸ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்த டீன் பிரின்ஸ் பயஸ் பேசுகையில் கூறியதாவது:-
வரும் முன் தடுப்பது
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 29-ந் தேதி உலக இதயநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. புகை பிடிப்பதை தவிர்த்தல், மது அருந்துவதை தவிர்த்தல், ஜங் புட் என்று சொல்லக்கூடிய கொழுப்பு நிறைந்த, எண்ணெயில் பொறிக்கப்பட்ட, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளை தவிர்த்தல், நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் ஏற்படாமல் இருத்தல், நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் தூங்குதல் போன்றவற்றின் மூலம் இதயநோயை வரும்முன் தடுக்கவும் செய்யலாம்.
தற்காலச் சூழலில் 25 வயதுக்கு மேற்பட்டோருக்கு கூட மாரடைப்பு ஏற்படுகிறது. அதனால் அரசு சார்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்ட ஊழியர்கள் வீடுகளுக்கு செல்லும் போது சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றவற்றை பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கிறார்கள்.
ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் "வைட்டல் வே" என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் முதலில் வைட்டல் வே பிரிவில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்த பிறகு தான் டாக்டர்களை சென்று பார்க்க வேண்டும் என்று தெரிவித்து வருகிறோம்.
பிரதான நோய்
பொதுவாக ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, சிறுநீரக செயல்பாடு, யூரியா, கிரியாட்டின், சர்க்கரை, கொழுப்பு அளவை பரிசோதித்துக்கொள்ள வேண்டும். உலக அளவில் இதய நோயால் ஆண்டுக்கு 20 மில்லியன் பேர் இறக்கிறார்கள். எனவே இந்த நோய் மனிதர்களின் பிரதான நோயாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் செயின்ட் சேவியர் கத்தோலிக்க நர்சிங் கல்லூரி மாணவிகளின் விழிப்புணர்வு நடனம் மற்றும் குறுநாடகமும் நடந்தது. நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி உறைவிட மருத்துவ அதிகாரி ஜோசப் சென் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.