கொடைக்கானல் மலைப்பகுதியில் 13 ஆண்டுகளுக்கு பிறகு பூத்துக்குலுங்கும் நீல குறிஞ்சி பூக்கள்
கொடைக்கானல் மலைப்பகுதியில் 13 ஆண்டுகளுக்கு பிறகு நீல குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
கொடைக்கானல் மலைப்பகுதியில் 13 ஆண்டுகளுக்கு பிறகு நீல குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
குறிஞ்சி பூக்கள்
சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் வகையில் கொடைக்கானலில் உள்ள மலைப்பாங்கான இடங்கள், சுற்றுலா பயணிகளை வெகுவாகு கவருகின்றன. அதேபோல் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் விதவிதமான பூக்களும் அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுக்கின்றன. அந்த வகையில் பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வகை பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் மலர் கண்காட்சி நடைபெறும்.
இந்தநிலையில் கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஏற்றவாறு அதிசய குறிஞ்சி பூக்கள் பூக்கின்றன. குறிஞ்சி பூக்களில் ஏறக்குறைய 200 வகைகள் உள்ளன. இவற்றில் 150 வகைகள் இந்தியாவில் தென்படுகின்றன. அதிலும் 30-க்கும் மேற்பட்ட வகை குறிஞ்சி பூக்கள் மேற்கு தொடர்ச்சி மலைகளான நீலகிரி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே பூத்துக்குலுங்குகின்றன.
13 ஆண்டுகளுக்கு பிறகு...
குறிஞ்சி செடிகள் பொதுவாக மலைசார்ந்த இடங்களில் மட்டுமே வளர்கின்றன. மேலும் கடல்மட்டத்தில் இருந்து 1,300 மீட்டர் முதல் 2,400 மீட்டர் உயரத்தில் இந்த குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீல குறிஞ்சி பூக்கள், 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறு குறிஞ்சி பூக்கள், ஆண்டிற்கு ஒருமுறை பூக்கும் ஓடை குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குவது தனிச்சிறப்பாக விளங்குகிறது.
இந்தநிலையில் கொடைக்கானலில் 13 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வ வகையான நீல குறிஞ்சி பூக்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்கள் ஏரிச்சாலை அருகே உள்ள தனியார் விடுதியில் உள்ள தோட்டத்தில் அதிக அளவில் பூத்துக்குலுங்குகின்றன. இந்த பூக்களில் இருந்து தேனீக்கள் தேன் எடுப்பது பார்ப்பவர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த அரிய வகை குறிஞ்சி பூக்களை தனியார் விடுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளும், அப்பகுதி பொதுமக்களும் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர்.