பூத்துக்குலுங்கும் பிரம்ம கமலம் பூக்கள்
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், பிரம்ம கமலம் பூக்கள் பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
பிரம்ம கமலம் பூக்கள்
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் குளு, குளு சீசன் நிலவுகிறது. மேலும் இங்கு குளிர் பிரதேசங்களில் வளரக்கூடிய அபூர்வ வகை பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 30-க்கும் மேற்பட்ட அபூர்வ வகையான பிரம்ம கமலம் செடிகள் நடவு செய்யப்பட்டன. இந்த செடிகளில் சிவப்பு, இளஞ்சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட நிறங்களில் பிரம்ம கமலம் பூக்கள் பூக்கக் கூடியது.
'செல்பி' எடுத்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில், பிரையண்ட் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பிரம்ம கமலம் செடிகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் தற்போது பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இரவு நேரத்தில் பூவில் இருந்து நறுமணம் வீசுகிறது. இது, பூங்காவுக்கு வருகை தரும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இந்த பிரம்ம கமலம் பூக்களை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். பூக்கள் முன்பு நின்று புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்தனர்.
கள்ளி இனத்தை சேர்ந்த இந்த செடிகளில், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பூக்கள் பூக்கும் தன்மையுடையதாகும். மேலும் இந்த பூக்கள் பூத்து, 3 நாட்கள் வரை வாடாமல் இருக்கும். அதன்பிறகு பூக்கள் உதிர்ந்து விடும். வரும் நாட்களில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் பூக்கள் பூக்கும் என்று பூங்கா மேலாளர் சிவபாலன் தெரிவித்தார்.