ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்


ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்துக்குலுங்கும் மலர்கள்
x
தினத்தந்தி 28 April 2023 12:15 AM IST (Updated: 28 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

கோடை சீசன்

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இந்த ஆண்டு மே மாதம் நடைபெறும் கோடை சீசனுக்காக டேலியா, பேன்சி, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, பிரமிளா, சால்வியா, பிரஞ்மேரி கோல்டு உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.

இதுதவிர மே மாதம் பூங்காவில் நடைபெறும் மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்பட்டன.

பணிகள் மும்முரம்

இந்த நிலையில் கோடை சீசன் தொடங்கி விட்டதாலும் மலர்கண்காட்சி தொடங்க இருப்பதாலும் இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, பெரணி இல்ல பகுதி, இலை பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் பாத்திகள் அமைக்கப்பட்டும், நடைபாதையோரங்களிலும் மலர் நாற்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

குறிப்பாக பூங்காவில் உள்ள பெரிய புல்வெளி மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு, அதனை சுற்றி கயிறு கட்டப்பட்டு உள்ளது. அதனுள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

பூத்துக்குலுங்கும் மலர்க்ள

இந்த நிலையில் தற்போது சால்வியா, மேரி கோல்ட், டேலியா, பெட்டுன்னி ஆகிய மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கி விட்டதால், பூங்காவுக்கு தினமும் வரும் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரிக்க தொடங்கி விட்டது. அவர்கள் வண்ண மலர்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். மேலும் தங்களது செல்போன்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.

இதுதவிர ஜெரோனியம், சைக்லமன், பென்ஸ்டிமன், சுவீட் லில்லியம், பேன்சி, பெட்டுனியா உள்பட மொத்தம் 230 வகையான மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து, அவர்களது கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது. பூந்தொட்டிகள் மலர் மாடங்கள் மற்றும் புல்வெளிகளில் பல்வேறு அலங்காரங்களுடன் அடுக்கி வைக்கப்பட உள்ளது.

தற்போது ஊட்டியில் வெயில் அடித்து வருவதால் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி அதனை பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூக்கள் பூத்து உள்ளதால் கோடை சீசன் களை கட்டியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story