கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் சிறு குறிஞ்சி பூக்கள்


கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும்  சிறு குறிஞ்சி பூக்கள்
x

கொடைக்கானலில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடிய அரியவகை சிறு குறிஞ்சி பூக்கள் தற்போது பூத்துக்குலுங்குகின்றன. அவற்றை பார்த்து ரசித்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைகின்றனர்.

திண்டுக்கல்

குறிஞ்சி பூக்கள்

சங்க கால புலவர் கபிலர் இயற்றிய குறிஞ்சி பாட்டில் குறிப்பிடப்படும் 99 வகை மலர்களில், தனித்துவம் பெற்றது குறிஞ்சி பூக்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இந்த பூக்கள் பூக்கும். இதனால் அந்த பூக்களுக்கு தனிமவுசு உண்டு.

குறிஞ்சி பூக்களில் சுமார் 200 வகைகள் உள்ளன. இதில், 150 வகையான பூக்கள் இந்தியாவில் காணப்படுகின்றன. குறிப்பாக 30-க்கும் மேற்பட்ட வகையான குறிஞ்சி பூக்கள் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான நீலகிரி, ஊட்டி, கொடைக்கானல், மூணாறு உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே அதிக அளவில் காணப்படுவதாக கூறப்படுகிறது.

குறிஞ்சி பூக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் பூக்கள் மட்டுமின்றி, 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆண்டிற்கு ஒருமுறை மற்றும் 6 மாதங்களுக்கு ஒருமுறை என்று பூக்கும் குறிஞ்சி பூக்கள் வகைகளும் உள்ளன.

சுற்றுலா பயணிகள்

இந்தநிலையில் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் மலைப்பகுதியில் 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் சிறு குறிஞ்சி பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. கொடைக்கானல் மலைப்பகுதியில் சிறு குறிஞ்சி செடிகள் அதிக அளவில் உள்ளன.

இந்த செடிகள் அடர்ந்த மரம், செடி கொடிகளுக்கு இடையே வளர்வதாலும், அதன் பூக்கள் மிகவும் சிறியதாக இருப்பதனாலும் சிறு குறிஞ்சி பூக்கள் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த குறிஞ்சி பூக்கள் நீல நிறமாக காட்சியளிப்பதால் பசுமை நிறைந்த மலைகளுக்கு இடையே ஆங்காங்கே பூத்து ரம்யமாக காட்சியளிக்கிறது.

குறிப்பாக கொடைக்கானல்-வத்தலக்குண்டு மற்றும் கொடைக்கானல்-பழனி பிரதான மலைப்பாதைகளின் ஓரங்களில் சிறு குறிஞ்சி பூக்கள் அதிக அளவில் தற்போது பூத்துக்குலுங்குகிறது. அத்துடன் பண்ணைக்காடு, தாண்டிக்குடி, அடுக்கம், பூலத்தூர் உள்ளிட்ட மலைக்கிராமங்களிலும் சிறு குறிஞ்சி பூக்கள் பூத்துள்ளன.

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் என்பதால் சிறு குறிஞ்சி பூக்களை கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசிப்பதுடன், தங்களது செல்போன், கேமராக்களில் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். இதேபோல் மலைக்கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் சிறு குறிஞ்சி பூக்களை பார்த்து ரசித்தனர்.


Next Story