பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்கள்
பூத்துக்குலுங்கும் காட்டு சூரியகாந்தி மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
கூடலூர்,
மலைகளின் ராணி என நீலகிரி அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கால நிலைகளுக்கு ஏற்ப வனப்பகுதியில் குறிஞ்சி உள்பட பல்வேறு மலர்கள் பூக்கின்றன. இதனால் சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள் நீலகிரி வனத்தின் அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். தற்போது பர்லியாறு தொடங்கி குன்னூர், நடுவட்டம், கூடலூர் வனப்பகுதியில் காட்டு சூரியகாந்தி மலர்கள் பூத்து குலுங்குகிறது. கூடலூர் கோக்கால் மலை முழுவதும் சூரியகாந்தி பூக்கள் மலர்ந்து உள்ளதால் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
இதனால் வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் மட்டும் இன்றி நீலகிரி பொதுமக்களும் காட்டு சூரியகாந்தி மலர்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதுகுறித்து தாவர ஆய்வாளர்கள் கூறும்போது, டித்தோனியா டைவர்சிபோலியா என அழைக்கப்படும் காட்டு சூரியகாந்தி மலர்கள், நவம்பர் மாதம் பூக்கத் தொடங்கும். தொடர்ந்து கோடை காலம் வரை செடிகளில் பூத்து காணப்படும். இவ்வகை மலர்கள் செடியில் நீண்ட நாட்களாக வாடாமல் இருக்கும். இதனால் காண்போரை வசீகரிக்கும் அழகைக் கொண்டதாக காணப்படுகிறது என்றனர்.