விசாரணைக்குழுவிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்த பா.ம.க. எம்.எல்.ஏ.
கருப்பூர்:-
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடு குறித்து பா.ம.க. எம்.எல்.ஏ. அருள் உள்பட 7 பேர் விசாரணைக்குழு முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
பெரியார் பல்கலைக்கழகம்
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடந்த பணி நியமனங்கள், பல்வேறு முறைகேடுகள் மற்றும் இட ஒதுக்கீடு, விதிமீறல் குறித்து புகார்கள் எழுந்தன. மேலும் கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல் புகார் நடந்ததாகவும் மற்றும் போலி பில்கள் தயாரித்து வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர், அரசியல் அமைப்பினர் சென்னையில் உள்ள உயர் கல்வித்துறைக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர்.
இதையடுத்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி மற்றும் இணைச்செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணைக்குழு அமைத்து உத்தரவிட்டது.
அருள் எம்.எல்.ஏ. ஆஜர்
பல்கலைக்கழகத்தில் நடந்ததாக கூறப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகளை குறிப்பிட்டு விரைவாக விசாரணை நடத்த அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி பல்கலைக்கழகத்தில் விசாரணை குழுவினர் சம்பந்தப்பட்ட ஆவணங்களை பார்வையிட்டு எடுத்து சென்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 6-ந் தேதி அன்று குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக புகார் அளித்த சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ. அருள், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்சன் ஆ.அண்ணாதுரை, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தலைவர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்க தலைவர் கனி வண்ணன், அந்தியூரை சேர்ந்த முத்து கண்ணன், சேலம் அம்பேத்கர் கல்வி இயக்க நிறுவனர் செந்தில்குமார், இந்திய மாணவ சங்க மாநில துணைத்தலைவர் கண்ணன் உள்ளிட்ட 7 பேரிடம் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் நேரில் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று காலை புகார் அளித்த அருள் எம்.எல்.ஏ., அம்பேத்கர் மக்கள் கட்சி தலைவர் ஜங்சன் அண்ணாதுரை உள்பட 7 பேர் நேரில் ஆஜராகி விளக்கமும் புகார் மனுவும் கைப்பட எழுதி உயர் கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி, மற்றும் இணைச்செயலாளர் இளங்கோ ஹென்றிதாஸ் ஆகியோரிடம் வழங்கினர்.
அரசு நடவடிக்கை எடுக்கும்
விசாரணைக்கு பின்னர் உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி கூறியதாவது:-
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து புகார் மனு மற்றும் ஆதாரங்கள் பெறப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு உடனடியாக தீர்க்கக்கூடிய குடிநீர் வசதி, விடுதியில் உள்ள குறைபாடுகளை உடனடியாக தீர்க்க உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளான பதிவாளர், பேராசிரியர்கள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை தயார் செய்து தமிழ்நாடு அரசிடம் வழங்கப்படும். அதன்பின்னர் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.