கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி
கோடைவிழாவையொட்டி, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடந்தது. சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
கொடைக்கானல்:
கோடைவிழாவையொட்டி, கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடந்தது. சாரல் மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
படகு அலங்கார போட்டி
இயற்கை எழில் கொஞ்சும் அழகு, இதயத்தை வருடும் இதமான சீதோஷ்ணநிலை ஆகியவற்றை தன்னகத்தே கொண்ட 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில், கடந்த 24-ந்தேதி கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி தொடங்கி நடந்து வருகிறது.
கோடை விழாவின் 5-வது நாளான இன்று சுற்றுலாத்துறை சார்பில், கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படகு அலங்கார போட்டி நடந்தது. இந்த போட்டியை கொடைக்கானல் நகராட்சி தலைவர் செல்லத்துரை, துணைத்தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சுவேதா ராணி கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜய சந்திரிகா, சுற்றுலாத்துறை அலுவலர் சின்ராஜ், ஒன்றிய கவுன்சிலர் ராசிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மலர்களால் உருவான சிங்கம்
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம், வருவாய்த்துறை, தோட்டக்கலை துறை, மீன் வளத்துறை, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில் படகுகள் போட்டியில் பங்கேற்றன.
இதில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் அலங்கரிக்கப்பட்ட படகில் ஜல் ஜீவன்மிஷின் குடிநீர் திட்டம், கிராமப்புற தார்சாலைகள், சமத்துவபுரம், சமுதாயக் கூடம், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறித்து காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதேபோல் தோட்டக்கலைத்துறை சார்பில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிங்கத்தின் உருவம் இடம்பெற்றிருந்தது. சுற்றுலாத்துறை சார்பில் இயக்கப்பட்ட படகில், முக்கிய சுற்றுலாத்தலங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
ராட்சத மீன் உருவம்
மீன்வளத்துறை சார்பில் ராட்சத மீன் உருவத்துடன் படகு வலம் வந்தது. வருவாய்த்துறை சார்பில், பேரிடர் மேலாண்மை துறை செயல்படுத்தும் திட்டங்கள் குறித்த வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், தமிழகத்தில் உள்ள தங்கும் விடுதிகளின் புகைப்படங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த போட்டியில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார படகு முதலிடத்தை பிடித்தது. தோட்டக்கலைத்துறை படகுக்கு 2-வது இடமும், மீன் வளத்துறை படகுக்கு 3-வது இடமும் கிடைத்தது.
ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
கண்களை கொள்ளை கொள்ளும் வகையில், நட்சத்திர ஏரியில் அணிவகுத்த அலங்கார படகுகளை சாரல்மழையில் நனைந்தபடி சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
மேலும் படகுகளுடன் செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். படகு அலங்காரப்போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த அரசு துறைகளுக்கு, கோடை விழா நிறைவு விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என சுற்றுலாத்துறையினர் தெரிவித்தனர்.