சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி


சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி
x

ஏற்காட்டில் கோடை விழாவையொட்டி, சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடந்தது.

சேலம்

ஏற்காடு

ஏற்காட்டில் கோடைவிழாைவயொட்டி, சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடந்தது.

கோடை விழா

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சிறந்த கோடை வாசஸ்தலம் ஆகும். இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில் கோடை விழா, மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு 46-வது கோடை விழா, மலர் கண்காட்சி கடந்த 21-ந் தேதி மாலையில் ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் தொடங்கியது. இந்த ஆண்டு அண்ணா பூங்காவில் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்ட பொன்னியின் செல்வன் கப்பல் வடிவம், டிராகன் வாரியர், சோட்டா பீம், தேனீ உள்ளிட்ட பல்வேறு வடிவமைப்புகள் வடிவமைக்கப்பட்டு சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன.

ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி திடலில் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வண்ண பூக்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு மலர் மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுலாத்துறை சார்பில் நாள்தோறும் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

படகு போட்டி

இந்த நிலையில் கோடை விழாவின் 4-வது நாளான நேற்று சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் படகு போட்டி நடைபெற்றது. ஏற்காடு படகு இல்லத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்ற இந்த படகு போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆண்கள் இரட்டையர், பெண்கள் இரட்டையர், தம்பதி, உள்ளூர் வாசிகள் படகு இல்ல ஊழியர்கள் என தனித்தனியாக படகு போட்டி நடத்தப்பட்டது.

படகு இல்லத்தில் இருந்து ஏரி பூங்கா கரை வரை சுமார் 500 மீட்டர் தூரத்தை படகில் கடந்து பரிசுகளை வென்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஏற்காடு தம்பதி

தம்பதிகளுக்கு நடந்த போட்டியில் ஏற்காட்டை சேர்ந்த பிரவீன்-நிஷா ஜோடி முதலிடம் பிடித்தனர். அறச்சலூரை சேர்ந்த பிரேமா-சண்முகசுந்தரம் இரண்டாம் இடமும், புதுவையை சேர்ந்த திவ்யா-தங்கராஜ் மூன்றாம் இடமும் பிடித்தனர். பெண்களுக்கான இரட்டையர் படகு போட்டியில் சென்னையை சேர்ந்த தமிழ்ச்செல்வி-பார்கவி முதலிடம் பிடித்தனர். சென்னையை சேர்ந்த சஞ்சனா -சஹானா 2-வது இடமும், புதுவையை சேர்ந்த வித்யாலட்சுமி-மாயா 3-வது இடம் பிடித்தனர்.

ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் நடந்த படகு போட்டியில் ஏற்காட்டை சேர்ந்த காமராஜ்-மோகன் முதலிடத்தை பிடித்தனர். செஞ்சியை சேர்ந்த ரவி-தருண் 2-வது இடமும், செஞ்சியை சேர்ந்த ஆனந்த்-ராஜதுரை 3-வது இடமும் பிடித்தனர். துடுப்பு போட்டியில் ஏற்காட்டை சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார். 2-வது இடத்தை வினோத்தும், 3-வது இடத்தை ராமரும் பிடித்தனர். இவர்கள் இருவரும் ஏற்காட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

பரிசளிப்பு விழா

நிறைவாக படகு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இதில் கூட்டுறவுத்துறை சேலம் மண்டல துணைப்பதிவாளர் பரமசிவம், சேலம் மாவட்ட சுற்றுலா அதிகாரி உமாதேவி, தமிழ்நாடு ஓட்டல் உதவி மேலாளர் கோபி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.


Next Story