ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரியில் படகு சவாரி கலெக்டர் அரமர்குஷ்வாஹா ஆய்வு


ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரியில் படகு சவாரி கலெக்டர் அரமர்குஷ்வாஹா ஆய்வு
x

தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரியில் படகு சவாரி விடுவது குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரியில் படகு சவாரி விடுவது குறித்து கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

படகு சவாரி

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி ஒன்றியத்தில் உள்ள நாராயணபுரம் கிராமம் அருகே தமிழக- ஆந்திர எல்லை பகுதியில் ஜவ்வாது ராமசமுத்திரம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 350 ஏக்கர் ஆகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாத இந்த ஏரியில் மழைக்காலங்களில் அதிக தண்ணீர் நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் நீர் தமிழகத்திற்குள் நுழையும். இந்த ஏரி பகுதி முழுவதும் ஆந்திர மாநில பகுதிக்கு உட்பட்டது என அம்மாநில அதிகாரிகள் மற்றும் மக்கள் கூறி வந்தனர்.

இந்தநிலையில், இந்த இடம் முழுவதும் தமிழகத்திற்கே சொந்தம் என கூறி தற்போது அந்த ஏரியில் படகு சவாரி விடுவது குறித்து திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த பகுதியில் படகு சவாரி மற்றும் இதர வசதிகள் செய்தால் ஒரு சுற்றுலா தலமாக மாறும் என்பது மக்களின் கருத்து. அதன் அடிப்படையில் நேற்று கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார் அப்போது அங்கு இருந்த அதிகாரிகளிடம் இது குறித்து முழுமையான ஒரு வடிவமைப்பை ஏற்படுத்தித் தரும்படி அவர்களிடம் அறிவுறுத்தினார்.

கலெக்டர் ஆய்வு

தொடர்ந்து நாராயணபுரம் பகுதியில் ரூ.9½ லட்சம் செலவில் நீர் வரத்து கால்வாய் அமைத்து நீர் உறிஞ்சி குழிகள் அமைக்கும் பணியினை கலெக்டர் பார்வையிட்டார். அதே போல் அலசந்தாபுரம் பகுதியிலும் ரூ.9.87 லட்சம் செலவில் நடைபெறும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து நாராயணபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்ற அவர் ரேஷன் பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்து, பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் கேட்டு அறிந்தார்.

இந்த ஆய்வுகளின் போது நாட்டறம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் பொதுப்பணி துறையினர், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.


Next Story