விசைப்படகு என்ஜின் பழுதால் நடுக்கடலில் தவிப்பு: காசிமேடு மீனவர்கள் 9 பேருடன் படகையும் மீட்ட கடலோர காவல்படை


விசைப்படகு என்ஜின் பழுதால் நடுக்கடலில் தவிப்பு: காசிமேடு மீனவர்கள் 9 பேருடன் படகையும் மீட்ட கடலோர காவல்படை
x

விசைப்படகு பழுதால் நடுக்கடலில் தவித்த காசிமேடு மீனவர்கள் 9 பேரையும், படகுடன் கடலோர காவல் படை பத்திரமாக மீட்டு, விசாகப்பட்டினம் மீன்வளத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை,

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கணபதி பெருமாள் என்ற பெயரை கொண்ட விசைப்படகில் 9 மீனவர்கள் கடந்த மாதம் (ஆகஸ்டு) 24ந்தேதி மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.

கடந்த 1ந்தேதி நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது அவர்கள் சென்ற விசைப்படகின் என்ஜினில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து படகில் இருந்தவர்கள் அதை சரிசெய்ய முயற்சித்தும், அது முடியவில்லை. இதனால் அவர்கள் நடுக்கடலில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

இதையடுத்து மீனவர்கள் வயர்லெஸ் மூலம் இதுபற்றி அருகில் உள்ள மீன்பிடி படகுகளுக்கு தகவல் கொடுத்து, மீன் வளத்துறைக்கும் அந்த தகவல் சென்றடைந்தது.

கடலோர காவல் படை

மீன்வளத்துறை அதிகாரிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கடலோர காவல் படையினர் நடுக்கடலில் தவித்து கொண்டிருந்த மீனவர்களையும், அவர்கள் சென்ற படகையும் கப்பல்கள் மற்றும் விமானம் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் இருந்து 240 கடல் மைல் தூரத்தில் அந்த படகை கண்டுபிடித்தனர். கடலோர காவல் படை அந்த இடத்துக்கு சென்றடையும் வரை, விசைப்படகுக்கு அருகில் இருந்த வணிக கப்பல் ஒன்றை தொடர்பு கொண்டு, அந்த படகை கண்காணிக்க சென்னை கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் கேட்டுக்கொண்டது.

மீட்பு

இதைத் தொடர்ந்து இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ஆயுஷ் என்ற கப்பல், மீனவர்கள் தவித்த படகுக்கு நேற்று முன்தினம் அதிகாலையில் சென்றடைந்தனர்.

முதலில் அவர்களுக்கு தேவையான தளவாடங்கள் மற்றும் மருத்துவ தேவைகளை வழங்கிய கடலோர காவல் படையினர், பின்னர் மீனவர்களை மீட்டதுடன், பழுதால் நடுக்கடலில் தத்தளித்த படகையும் கயிறு மூலம் கட்டி, விசாகப்பட்டினம் துறைமுகத்துக்கு இழுத்து வந்தனர்.

இறுதியாக விசைப்படகு மற்றும் அதில் இருந்த மீனவர்களை விசாகப்பட்டினம் மீன்வளத்துறையினரிடம், கடலோர காவல் படையினர் பாதுகாப்பாக ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட பிறகு, அவர்கள் வந்த விசைப்படகு சரிசெய்யப்பட்டு, காசிமேடு திரும்புவார்கள் என்று தெரிகிறது.


Next Story