காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு: பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்


காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு:   பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்
x

மேட்டூர் அணையில் உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால், பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

சேலம்

எடப்பாடி,

விசைப்படகு

சேலம் மாவட்டம், எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டு நீர்மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கதவணை நீர்த்தேக்க பரப்பில், சேலம் மாவட்டத்தின் எல்லையான பூலாம்பட்டி மற்றும் மறுகரையில் உள்ள ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை பகுதியை இணைக்கும் வகையில் நீர்வழி போக்குவரத்தாக விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இரு மாவட்டங்களையும் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் அதிக எண்ணிக்கையில் விசைப்படகு போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக நேற்று முன்தினம் நிரம்பியது. இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில்திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி வீதம் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது.

நிறுத்தம்

இதன்காரணமாக காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் பயணிகளின் பாதுகாப்பை கருதி ேசலம் மாவட்ட நிர்வாகம் பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்தை நேற்று தற்காலிகமாக நிறுத்தியது. மேலும் பூலாம்பட்டி மற்றும் காவிரி கரையோர பகுதியில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவானந்தம் தலைமையிலான ஊழியர்கள் முகாமிட்டு பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், விசைப்படகில் பயணம் செய்து வந்த பயணிகள் தற்போது 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி மாற்றுப்பாதையில் மறுகரைக்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story