சாத்தனூர் அணையில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது


சாத்தனூர் அணையில் படகு சவாரி மீண்டும் தொடங்கியது
x

சாத்தனூர் அணையில் படகு சவாரி மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

சாத்தனூர் அணையில் படகு சவாரி மீண்டும் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சாத்தனூர் அணை

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டதாகும். தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய அணைகளில் இந்த அணையும் ஒன்றாக திகழ்வதோடு சுற்றுலா பயணிகள் வந்து செல்வதற்கு ஏற்ற இடமாகவும் அமைந்துள்ளது. எனவே விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

சாத்தனூர் அணையில் பூங்காக்கள் சிறுவர் விளையாட்டு பூங்காக்கள் முதலைப்பண்ணை, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களோடு இந்த சாத்தனூர் அணை அமைந்துள்ளது.

படகு சவாரி

மேலும் இங்கு படகு சவாரி செய்வதற்கு படகு குழாம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விடப்பட்ட படகுகள் பழுதடைந்து போனதால் பல மாதங்களாக சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் சாத்தனூர் அணையை ஒட்டி குடியிருப்புகள் கட்டவும் மற்றும் அணையின் பழைய மதகுகளை புதுப்பித்து புதிய ஷட்டர்கள் அமைப்பது பூங்காக்களை விரிவு படுத்துவது போன்ற பல்வேறு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக அரசு ரூ.90 கோடிஒதுக்கீடு செய்தது. இந்த நிதியில் புனரமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

கொரோனோ தொற்று காரணமாக சாத்தனூர் அணை பல மாதங்கள் மூடப்பட்டு இருந்தது. தற்போது சாத்தனூர் அணை திறக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

அதே நேரத்தில் அணையில் இருந்த படகு சவாரிக்கான படகுகள் சேதமடைந்து பயனற்று போனதால் தற்போது தமிழக அரசு ஒதுக்கி உள்ள புனரமைப்பு நிதியிலிருந்து 6 புதிய படகுகள் வாங்கப்பட்டுள்ளது

மகிழ்ச்சி

இந்த படகுகள் நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது சாத்தனூர் அணையில் மீண்டும் படகு குளத்தில் படகு சவாரி தொடங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து படகு சவாரி செய்து வருகின்றனர். நபர் ஒருவருக்கு அரை மணி நேரம் சவாரி செய்வதற்கு ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சாத்தனூர் அணையில் பல மாதங்களுக்கு பின்பு படகு சவாரி மீண்டும் தொடங்கியுள்ளது சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.



Next Story