படகு சவாரியுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டுவர வேண்டும்
வேலூர் கோட்டையில் படகு சவாரியுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டுவரவேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது.
மக்கள் குறைதீர்வு கூட்டம்
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அணைக்கட்டு தொகுதி பொறுப்பாளர் கோட்டி என்ற கோவேந்தன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
விருப்பாட்சிபுரம் அண்ணாவீதி, இந்திராநகர், சக்திநகர், பாறைமேடு ஆகிய பகுதியை சேர்ந்த பொதுமக்களாகிய நாங்கள் எங்கள் பகுதியில் டாக்டர் அம்பேத்கர் படம் இரும்பு பலகையில் வைத்திருந்தோம். அந்த பலகை சிதிலமடைந்துள்ளது. எனவே அங்கு நாங்கள் சுவரில் படம் வரைய அனுமதிக்க வேண்டும்.
படம் வரைய அனுமதி மறுக்கும் வருவாய்த்துறை அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேசியக்கொடி ஏந்தி...
நெல்வாய் கிராமத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் அளித்துள்ள மனுவில், எனது தாத்தாவுக்கு 1917-ம் ஆண்டு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. அதை எனது தந்தை மற்றும் நான் அனுபவித்து வந்தோம். இந்தநிலையில் அந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார்.
முன்னாள் ராணுவவீரர் நடராஜ் என்பவர் கையில் தேசிய கொடியை ஏந்திக்கொண்டு மனு அளித்தார். அந்த மனுவில் வேலூரில் விமான நிலைய பணிகள் தாமதமாக நடக்கிறது. அதை விரைந்து முடிக்க வேண்டும். வேலூர் கோட்டையில் படகு சவாரியுடன் பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டுவரவேண்டும். வேலூர்- திருப்பதிக்கு 8 வழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கி இருந்தது.
மயக்கம் போட்ட இளம்பெண்
அணைக்கட்டு ஒன்றியம் குருவராஜாபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் உமாமகேஸ்வரிநீலமேகம் மற்றும் கவுன்சிலர்கள் அளித்துள்ள மனுவில் ஒன்றியக் குழு உறுப்பினரின் கணவர் ஊராட்சி மன்ற அனுமதி இல்லாமல் பழைய ஊராட்சி மன்ற கட்டிடத்தை இடித்தார். கட்டிடத்தை இடிக்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றியும் இடித்துள்ளார். இது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கேட்டதற்கு அனுமதி பெற்று இடித்துள்ளதாக அவர் கூறுகிறார். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலகத்துக் தாயாருடன் இளம்பெண் ஒருவர் மனு அளிக்க வந்திருந்தார். வரிசையில் நின்றிருந்தபோது திடீரென அந்த இளம்பெண் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். எனினும் அவர் சுயநினைவுக்கு வரவில்லை. பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அந்த இளம்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
கூட்டத்தில் 6 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் எந்திரங்களை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வழங்கினார்.