குளச்சலில் படகுகள் மீன் பிடிக்க செல்லவில்லை
புயலால் கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து குளச்சலில் படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
குளச்சல்:
புயலால் கடலில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து குளச்சலில் படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
பலத்த காற்று எச்சரிக்கை
வங்க கடலில் கடந்த 5-ந்தேதி உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் அதிகாலையில் 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்றது.
அதைத்தொடர்ந்து தமிழக கடல் பகுதியில் காற்றின் வேகம் 70 கி.மீ. வரை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
அதைத்தொடர்ந்து குளச்சல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. குளச்சல் கடல் பகுதியில் சுமார் 300 விசைப்படகுகளையும், 1000-க்கும் மேற்பட்ட பைபர் வள்ளம், கட்டுமரங்களையும் வைத்து மீனவர்கள் மீன்பிடித்தொழில் செய்து வருகின்றனர் விசைப்படகுகள் ஆழ்கடல் பகுதிவரை சென்று 7 முதல் 10 நாட்கள்வரை தங்கி மீன்பிடித்து விட்டு கரை திரும்புவது வழக்கம்.
கடலுக்கு செல்லவில்லை
ஆனால் நேற்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கையை தொடர்ந்து விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை. அவை குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பைபர் வள்ளங்கள், கட்டுமரங்களும் மீன்பிடிக்க செல்லவில்லை. இவை மணற்பரப்பில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு சில வள்ளங்களே மீன் பிடிக்க சென்றன. அவற்றுக்குள் போதிய மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் குளச்சலில் கடந்த 3 நாட்களாக மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டது.
இதே போல் முட்டம் மீனவர்களும் கடலுக்கு செல்லவில்லை. கன்னியாகுமரி சின்னமுட்டம் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
மேற்கு கடற்கரை பகுதியில் காற்று எச்சரிக்கை விடுக்கப்படாததால் தேங்காப்பட்டணத்தில் இருந்து படகுகள் கடலுக்கு சென்றன.