போடிநாயக்கன்பட்டி சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


போடிநாயக்கன்பட்டி சாலையை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x

சேலம் போடிநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெற்கு ரெயில்வே மேலாளரிடம் அருள் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.

சேலம்

சேலம் போடிநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என தெற்கு ரெயில்வே மேலாளரிடம் அருள் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு வழங்கி உள்ளார்.

எம்.எல்.ஏ. மனு

சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா ஆய்வு செய்தார். அப்போது, அவரிடம் சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள், தொகுதியில் உள்ள ரெயில்வே துறை சார்ந்த கோரிக்கை மனுவை வழங்கினார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட மாங்குப்பை, வெள்ளக்கல்பட்டி ஊராட்சி நெரிஞ்சிப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 300 குடும்பங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு மூன்று பக்கமும் ரெயில்வே டிராக் உள்ளது.

தற்போது பெரிய ரெயில்வே டிராக் போடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. அவ்வாறு டிராக் போட்டுவிட்டால் இந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் எதுவும் வர முடியாது. 2 கிராமங்களுக்கான தொடர்பு துண்டிக்கப்பட்டு விடும். எனவே சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று வழிகள் செய்து கொடுக்க வேண்டும்.

தானியங்கி மின் மோட்டார்

சூரமங்கலம் மற்றும் ஆண்டிப்பட்டியை இணைப்பதற்கு ஒரு தரைவழிப்பாலம் உள்ளது. அந்த பாலத்தில் மழைக்காலத்தில் நீர் தேங்குவதால் பொதுமக்கள் பயன்படுத்த தடையாக இருப்பதை கருத்தில் கொண்டு தானாக இயங்கும் ஒரு மின் மோட்டார் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அது தற்போது செயல்படவில்லை. எனவே மின் மோட்டாரை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

அதேபோல், கோட்டகவுண்டம்பட்டி கிராமத்திற்கு செல்லும் வழியிலும் ஒரு தரைவழிப்பாலம் உள்ளது. அங்கும் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதால் ஒரு தானியங்கி மின் மோட்டார் வைத்து மழை தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை

சேலம் ஜங்ஷன் நுழைவு வாயில் அருகில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி போடிநாயக்கன்பட்டிக்கு செல்லும் சாலை உள்ளது. அந்த சாலையை பயன்பாட்டுக்கு கொண்டுவர ரெயில்வே நிர்வாகம் கேட்ட தொகையை சேலம் மாநகராட்சி சார்பில் ரெயில்வே துறைக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அந்த பணி தொடங்கப்படவில்லை. எனவே அந்த சாலையை உடனடியாக அமைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story