அரூர் அருகே மயான வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை ஆற்றோரம் அடக்கம் செய்யும் அவலம்


அரூர் அருகே மயான வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை ஆற்றோரம் அடக்கம் செய்யும் அவலம்
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே மயான வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை பொதுமக்கள் ஆற்றோரம் அடக்கம் செய்து வருகிறார்கள்.

மயான வசதி

அரூர் அருகே உள்ள வேப்பம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டது மாம்பாடி கிராமம். இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மாம்பாடியை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகிறார்கள். இந்த பகுதியில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய மயான வசதி இல்லை. இதனால் இறந்தவர்களின் உடல்கள் அங்குள்ள காட்டாற்றின் கரையோர பகுதியில் அடக்கம் செய்யப்பட்டு வருகிறது. மயான வசதி கேட்டு பொதுமக்கள் பலமுறை மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற 85 வயது மூதாட்டி வயது முதிர்வு காரணமாக இறந்தார். அவருக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர்.

இடுப்பளவு தண்ணீர்

இதையடுத்து அவருடைய உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் எடுத்து சென்றனர். மயான வசதி இல்லாத காரணத்தால் காட்டாற்றின் கரையோரம் மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய அவர்கள் முடிவு செய்தனர்.

இதற்காக அவர்கள் காட்டாற்றில் இறங்கி, இடுப்பளவு தண்ணீரில் மூதாட்டியின் உடலை தூக்கி சென்றனர். பின்னர் மூதாட்டி உடல் ஆற்றின் கரையோரம் அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறுகையில், மயான வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை ஆற்றின் கரையோரத்தில் அடக்கம் செய்து வருகிறோம். இறந்தவர்களின் உடலை காட்டாற்றை கடந்து தான் அடக்கம் செய்ய கொண்டு செல்ல வேண்டும். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது, ஆபத்தான நிலையில் அதனை கடந்து சென்று உடல்களை அடக்கம் செய்வோம். இந்த அவலநிலையை போக்க மயான வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்றனர்.


Next Story