இறந்த பன்றிகளின் உடல்கள் சாலையோரம் வீச்சு
பந்தலூர் அருகே இறந்த பன்றிகளின் உடல்கள் சாலையோரம் வீசப்பட்டன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
பந்தலூர்,
பந்தலூர் அருகே இறந்த பன்றிகளின் உடல்கள் சாலையோரம் வீசப்பட்டன. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
வளர்ப்பு பன்றிகள்
பந்தலூர் தாலுகா அய்யன்கொல்லி அருகே பூலக்குன்று பகுதி தமிழக-கேரள எல்லையில் உள்ளது. அப்பகுதியில் வளர்ப்பு பன்றிகளுக்கு ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவியதை தொடர்ந்து, சுல்தான்பத்தேரி கால்நடை துறையினர் 213 வளர்ப்பு பன்றிகளை கொன்று புதைத்தனர். இதற்கிடையே குந்தலாடி, கொளப்பள்ளி, அம்மன்காவு, சப்பந்தோடு உள்பட பல பகுதிகளில் கேரளாவில் இருந்து பன்றிகள் கொண்டு வரப்பட்டு வளர்ப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கொளப்பள்ளியில் இருந்து நெல்லியாளம் டேன்டீ வழியாக அம்மன்காவு செல்லும் சாலையில் 9 லைன்ஸ் மைதானம் அருகே இறந்த பன்றிகள் மற்றும் நோயுடன் உயிருக்கு போராடும் பன்றிகளை சிலர் வீசி செல்கின்றனர். இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, திறந்தவெளியில் வளர்ப்பு பன்றிகளை வீசி செல்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கடும் நடவடிக்கை
இந்தநிலையில் நேற்று பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் தேவராஜ் ஆகியோர் குந்தலாடி, உப்பட்டி பகுதிகளில் வளர்ப்பு பன்றிகள் வளர்க்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர். அப்போது அரசு அனுமதி பெறாமல் பண்ணைகளில் பன்றிகள் வளர்ப்பது தெரியவந்தது. உடனே அனுமதி பெற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் எச்சரித்தனர். தொடர்ந்து அம்மன்காவு பகுதியில் வீசப்பட்டு கிடந்த பன்றிகளை கால்நடைதுறை, வருவாய்த்துறையினரும் குழி தோண்டி புதைத்தனர்.