கால்நடை தீவன தேவையை பூர்த்தி செய்யும் வேலிமசால் சாகுபடி


கால்நடை தீவன தேவையை   பூர்த்தி செய்யும் வேலிமசால் சாகுபடி
x
திருப்பூர்

போடிப்பட்டி:

உடுமலை பகுதியில் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வேலிமசால் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிக செலவு

உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. அதன் உப தொழிலாக கால்நடை வளர்ப்பின் மூலம் விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கால்நடைகளின் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக அதிக அளவில் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. இந்த செலவை பெருமளவு தவிர்ப்பதற்கு வேலிமசால் சாகுபடி கைகொடுத்து வருவதாக விவசாயிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது 'விவசாயிகளின் விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்காத நிலை தற்போது உள்ளது. இதனால் பசுக்கள் மூலம் பால் உற்பத்தி, ஆடு மற்றும் கோழிகளை இறைச்சிக்காக விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருவாய் பெறும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பலவும் காணாமல் போய்விட்டது. அவை பல்வேறு மாற்று பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு விட்டது. இதனால் கால்நடைகளின் பசுந்தீவனத்துக்காக பெருமளவு செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

வறட்சியை தாங்கும்

ஒரு கட்டத்தில் கால்நடை வளர்ப்பை கைவிட்டு விடலாம் என்று எண்ணுமளவுக்கு அதிக நெருக்கடியை தீவனத் தேவை உண்டாக்கியது. இதனையடுத்து யானைப் புல், குதிரை மசால், நேப்பியர் புல், வேலி மசால் உள்ளிட்ட கால்நடைத் தீவனங்களை விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பயிரிடத் தொடங்கியுள்ளனர். இதில் வேலிமசால் சாகுபடி விவசாயிகளுக்கு பெருமளவு கைகொடுப்பதாக உள்ளது. விதைகள் மூலம் சாகுபடி செய்யப்படும் வேலிமசால் அதிக பராமரிப்பில்லாமல் வளரக் கூடிய தீவனப் பயிராக உள்ளது.

இதனை விதைத்து சுமார் 80 நாட்களில் அறுவடை செய்யத் தொடங்கலாம். அதன் பிறகு மீண்டும் சுமார் 45 நாட்களில் அடுத்தடுத்து அறுவடைக்குத் தயாராகி விடுகிறது. வறட்சியை தாங்கி வளரக்கூடிய வேலிமசால் பயிரில் அதிக அளவில் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை. மேலும் வறட்சியால் காய்ந்து விட்டாலும் மீண்டும் மழை பெய்யும் போது துளிர்த்து வளரும் தன்மை கொண்டது.

விதை உற்பத்தி

ஒரு ஏக்கருக்கு ஆண்டுக்கு 50 டன் வரை மகசூல் தரக்கூடியது. இது ஒரு பல்லாண்டுத் தாவரம் என்பதால் ஒரு பகுதியிலிருந்து கால்நடைகளுக்குத் தேவையான அளவு அறுவடை செய்யும்போது ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக தீவனத்தைப் பெற முடியும். வேலிமசாலின இலைகள் சிறியதாக இருப்பதுடன் கால்நடைகளுக்கு எளிதில் ஜீரணமாகும் தன்மை கொண்டதாகவும் உள்ளது.

மேலும் அதிக அளவில் புரதச்சத்து கொண்ட வேலிமசாலில் கால்நடைகளுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளது. கறவை மாடுகளுக்கு தினசரி 5 கிலோ வரையிலும், ஆடுகளுக்கு தினசரி 2 கிலோ வரையிலும் வேலிமசாலை தீவனமாக வழங்கலாம். நம்மிடமுள்ள கால்நடைகளின் தேவைக்கு அதிகமாக வேலிமசால் சாகுபடி செய்திருந்தால் அவற்றில் ஒரு பகுதியை விதைகளுக்காக விட்டுவிடலாம். விதை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் கூடுதலாக வருவாய் ஈட்ட முடியும்' என்று விவசாயிகள் கூறினர்.


Next Story