புகையிலைபொருட்கள் விற்பனை தாராளம்
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வட மாநிலத் தொழிலாளர்கள்
புகையிலைப் பொருட்கள் பயன்படுத்துவதால் வாய்ப் புற்று நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு அவற்றின் விற்பனை மற்றும் பயன்பாட்டுக்குத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் அதிக லாபம் பெறும் நோக்கில் ஒருசிலர் அவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
மடத்துக்குளம், குமரலிங்கம் பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பலருக்கு புகையிலைப் பொருட்கள் மற்றும் போதைப்பாக்குகள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது.மேலும் இந்த பொருட்களைப் பயன்படுத்தி அதற்கு அடிமையானவர்கள் பலர் உள்ளனர். அதுபோன்ற நபர்கள் என்ன விலை கொடுத்தும் இந்த பொருட்களை வாங்கிப் பயன்படுத்தத் தயாராக உள்ளனர். இதனால் ஒருசில வியாபாரிகள் லாப நோக்கத்தோடு அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். அதனைக் கட்டுப்படுத்த வேண்டிய அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து விடுகின்றனர். இதனால் இவற்றின் புழக்கம் அதிகரித்து சிறுவர்களும், சில பெண்களும் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
புகையிலைப் பொருட்களைப்பயன்படுத்துபவர்கள் உடல் ரீதியான பல்வேறு பாதிப்புகளை சந்திப்பதுடன், கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால் சுகாதார சீர்கேடுகளும் ஏற்பட்டு வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களுக்கு சீல் வைப்பது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனைக்கு இணையான கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவற்றின் புழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சமீபத்தில் திருப்பூரிலிருந்து வந்த சிறப்புக்குழுவினர் மடத்துக்குளம் நால்ரோட்டில் புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த பெட்டிக்கடைக்கு 'சீல்' வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை உள்ளூர் அதிகாரிகளும் மேற்கொண்டால் மட்டுமே புகையிலைப் பொருட்களின் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.இவ்வாறு சமூக ஆர்வலர்கள் கூறினர்.