திருச்செந்தூர் அருகே உடல் தோண்டி எடுப்பு: அனல் மின்நிலைய ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது


திருச்செந்தூர் அருகே உடல் தோண்டி எடுப்பு: அனல் மின்நிலைய ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே அனல் மின்நிலைய ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். புதைக்கப்பட்டு இருந்த ஊழியரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே கொன்று புதைக்கப்பட்ட அனல் மின்நிலைய ஊழியர் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. இதுதொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

அனல் மின்நிலைய ஊழியர்

திருச்செந்தூர் வீரபாண்டியபட்டினம் பிரசாத் நகரைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகன் பாலகண்ணன் (வயது 40). இவர் உடன்குடி அருகே கல்லாமொழி அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். கடந்த 7-ந்தேதி வேலைக்கு சென்ற இவர் பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து பாலகண்ணன் மனைவி பேச்சியம்மாள் அளித்த புகாரின்பேரில், திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொன்று புதைப்பு

விசாரணையில், சம்பவத்தன்று திருச்செந்தூர்- நெல்லை ரோட்டில் நடந்து சென்ற பாலகண்ணன் மீது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் மோதியதும், இதில் மோட்டார் சைக்கிளின் இன்டிகேட்டர் உடைந்ததால், அதற்கான பணத்தைக் கேட்டு பாலகண்ணனிடம் அவர்கள் தகராறு செய்ததும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள், பாலகண்ணனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று, திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ஜெ.ஜெ.நகர் அருகே காட்டுப்பகுதியில் வைத்து அவரை தாக்கி, கொலை செய்து உடலை புதைத்ததும் தெரிய வந்தது.

2 வாலிபர்கள் கைது

இதுதொடர்பாக திருச்செந்தூர் ஜீவா நகரைச் சேர்ந்த கண்ணன் மகன் சுடலைமணி (19), திருச்செந்தூரை சேர்ந்த பாலமுருகன் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் தலைமறைவான திருச்செந்தூரை சேர்ந்த புறா ராஜா, சுரேஷ்கோபி, தூத்துக்குடியைச் சேர்ந்த ஜேசு ஆகிய 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

உடல் தோண்டி எடுப்பு

இதற்கிடையே திருச்செந்தூர் வீரபாண்டியன்பட்டினம் ஜெ.ஜெ.நகர் அருகே காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட பாலகண்ணனின் உடலை நேற்று தாசில்தார் வாமனன் முன்னிலையில் தோண்டி எடுத்தனர்.

பின்னர் அவரது உடலை தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி டாக்டர் உதயகுமார் தலைமையிலான குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து பாலகண்ணனின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இதையொட்டி அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

------


Next Story