கொள்ளிடம் ஆற்று மணல் பரப்பில் பெண் பிணம்


கொள்ளிடம் ஆற்று மணல் பரப்பில் பெண் பிணம்
x

ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்று மணல் பரப்பில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

திருச்சி

ஸ்ரீரங்கம், ஜூலை.12-

ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்று மணல் பரப்பில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கொள்ளிடம் ஆற்றில் பெண் பிணம்

திருச்சி ஸ்ரீரங்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட வடக்குவாசல் அருகே கொள்ளிடம் ஆற்றின் நடுப்பகுதியில் மணல்பாங்கான இடத்தில் முட்புதருக்குள் இருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. அப்போது அந்த வழியாக ஆடு மேய்த்து கொண்டு இருந்தவர்கள் அங்குள்ள புதருக்குள் பார்த்தனர். அங்கு பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருந்ததால் உடல் அழுகி இருந்தது.

உடனடியாக இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று ஆற்றில் இறங்கி இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றினர். ஆற்றில் தண்ணீர் இல்லாத மணற்பரப்பில் புதருக்குள் பெண் பிணமாக கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டரா? என போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அங்கு விரல்ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர்.

போலீசார் விசாரணை

சம்பவ இடத்துக்கு மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. பின்னர் இறந்து கிடந்த பெண் யார்?. எந்த பகுதியை சேர்ந்தவர் என விசாரித்தனர். விசாரணையில் அவர், லால்குடி டால்மியாபுரம் அருகே முதுவத்தூரை சேர்ந்த செல்வி என்கிற கலைச்செல்வி (வயது 35) என்பது தெரியவந்தது. மேலும், அவருடைய கணவர் கடந்த சில மாதத்துக்கு முன்பு இறந்து விட்டார் என்பதும் தெரியவந்தது.

கலைச்செல்வி கொள்ளிடம் ஆற்றுக்கு ஏன் வந்தார்?. அவரை மர்ம நபர்கள் யாரேனும் திட்டமிட்டு அழைத்து வந்தார்களா?. இதில் ஈடுபட்ட ஆசாமிகள் யார்? என ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளிடம் ஆற்று மணல் பரப்பில் பெண் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வயல்வெளியில் முதியவர் பிணம்

இதேபோல் திருச்சி நெ.1டோல்கேட் அருகே உள்ள தமாரைக்குளம் வயல்வெளி பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொள்ளிடம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த முதியவர் யார் ? எந்த ஊரைச்சேர்ந்தவர்? அவரை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story