ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான கிணற்றில் தலை துண்டான நிலையில் பெண் பிணம்
திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான கிணற்றில் தலை துண்டான நிலையில் பெண்பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் அருகே ஊராட்சி மன்ற தலைவருக்கு சொந்தமான கிணற்றில் தலை துண்டான நிலையில் பெண்பிணம் கிடந்தது. அவர் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண்பிணம்
திருப்பத்தூர் அருகே உள்ள எலவம்பட்டி ஊராட்சி செல்ரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவேகானந்தர் (வயது 58). இவரது மனைவி ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறினர். அதன்பேரில் கிணற்றில் பார்த்தபோது 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் பிணமாக கிடந்தது தெரியவந்தது. உடனடியாக இதுகுறித்து கந்திலி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவலின்பேரில் கந்திலி போலீசார் மற்றும் நாட்றம்பள்ளி தீயணைப்பு துறையினர் சென்று பார்த்தபோது பெண்ணின் உடல் தனியாகவும், தலை தனியாகவும் கிடந்தது. உடல் அடையாளம் காணமுடியாத அளவுக்கு அழுகிய நிலையில் இருந்தது. தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி இளம்பெண்ணின் உடல் மற்றும் தலையை மீட்டனர்.
கொலையா?
தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிணமாக கிடந்த பெண் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை யாரும் கொலைசெய்து கிணற்றில் வீசிச்சென்றார்களா என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கிணற்றில் இளம்பெண் உடல் தனியாகவும், தலை தனியாகவும் கிடந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.