மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்பு
மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய கல்லூரி மாணவர் பிணமாக மீட்கப்பட்டார்.
மேட்டூர்:
மேட்டூர் அடுத்த ஜலகண்டாபுரம் அருகே ஆடையூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகன் ஜீவா (வயது 21). இவர் மேச்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜீவா தனது நண்பர்களுடன் மேட்டூர் அடுத்த செக்கானூர் பேரேஜ் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற ஜீவா தண்ணீரில் மூழ்கினார். இதையடுத்து தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தேடினர். ஆனால் இரவு வரை தேடியும் கிடைக்காததால் நேற்று காலை தேடும் பணி தொடர்ந்தது. அப்போது செக்கானூர் பேரேஜ் அருகே மீனவர்கள் உதவியுடன் ஜீவாவின் உடல் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. இதையடுத்து மேட்டூர் போலீசார் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.