இறந்த நாயின் உடல் காவல் நிலைய வளாகத்தில் புதைப்பு


இறந்த நாயின் உடல் காவல் நிலைய வளாகத்தில் புதைப்பு
x

இறந்த நாயின் உடலை போலீசார் காவல் நிலைய வளாகத்திலேயே புதைத்து இறுதி சடங்கை நிறைவேற்றினர்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

இறந்த நாயின் உடலை போலீசார் காவல் நிலைய வளாகத்திலேயே புதைத்து இறுதி சடங்கை நிறைவேற்றினர்.

ஆரல்வாய்மொழியில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

போலீசாருடன் நெருங்கி பழகிய நாய்

ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்திற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் நாய் குட்டி வந்தது. பின்னர் போலீஸ் நிலைய வளாகத்திற்குள்ளேயே அந்த நாய் சுற்றி திரிந்தது. அங்கு போலீசார் கொடுக்கும் உணவை சாப்பிட்டபடி வளர்ந்தது. இவ்வாறாக போலீசாருக்கும் அந்த நாய் உற்ற நண்பனாக மாறியது. போலீசார் டீ குடிக்க சென்றால் அவர்கள் பின்னாலேயே சென்று விடும்.

அதே சமயத்தில் வெளியில் இருந்து யாரும் எதையும் போலீஸ் நிலையத்திற்குள் கொண்டு வரலாம். ஆனால் உள்ளே இருந்து எந்த பொருளையும் வெளியே எடுத்துச் செல்ல நாய் அனுமதிப்பதில்லை. அந்த வகையில் போலீஸ் நிலையத்தையும் நாய் காவல் காத்தது என்றே கூறலாம்.

காவல் நிலைய வளாகத்தில் புதைப்பு

இந்தநிலையில் சாலையை கடக்க முயன்ற போது நாய் ஏதோ ஒரு வாகனத்தில் அடிபட்டதாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நாய் சரிவர சாப்பிடவில்லை. உடனே போலீசார் கால்நடை மருத்துவரை அழைத்து நாய்க்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நாய் பரிதாபமாக இறந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த நாயை போலீஸ் நிலைய வளாகத்திலேயே அடக்கம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி குழி தோண்டிய போலீசார் கண்கலங்கியபடி நாயை புதைத்து இறுதி சடங்கை நிறைவேற்றினர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story