கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x

கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவருடைய மனைவிக்கு அரசு வேலை, வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை அருகே நடுக்கல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் குமாரவேல் மகன் நம்பிராஜன் (வயது 29). இவர் கடந்த 21-ந்் தேதி வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவர் கோவில்பட்டி கோர்ட்டில் சரணடைந்தார். பலியான நம்பிராஜனின் உடலை வாங்க மறுத்தும், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடைபெற்றன.

இந்தநிலையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு உத்தரவின் பேரில் நெல்லை உதவி கலெக்டர் சந்திரசேகர் தலைமையில், தாசில்தார் மாணிக்கவாசகம், சிறப்பு தாசில்தார் பகவதி அம்மாள், மண்டல துணை தாசில்தார் குமார், சுத்தமல்லி இன்ஸ்பெக்டர் ஜீன் குமார், வருவாய் ஆய்வாளர் லட்சுமண பாண்டியன் ஆகியோர் கல்லூர் வேலாயுதம், சமுதாய பிரமுகர்கள் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலை செய்யப்பட்டவரின் மனைவி பேச்சியம்மாள் என்ற பேபிக்கு சுகாதார பணிக்கான உத்தரவு, மேலக்கல்லூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா, ஆதரவற்ற விதவைச் சான்று ஆகியவற்றை சந்திரசேகர் நேரில் வழங்கினார்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து நம்பிராஜனின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் 2 வேன்களில் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திரண்டனர். இதையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவின்பேரில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு கோடகநல்லூர் தாமிரபரணி ஆற்றங்கரையில் தகனம் செய்யப்பட்டது.


Next Story