ஆற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் பிணமாக மீட்பு
மீன்பிடித்தபோது கொள்ளிடம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வாலிபர் 8 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்பட்டார்.
4 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்
இந்தநிலையில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அணைக்கரை பகுதியை சேர்ந்த மனோஜ்(வயது 23), ஆகாஷ்(24), ராஜேஷ்(22), கொளஞ்சிநாதன் (34) ஆகிய 4 பேர் கடந்த 18-ந் தேதி கொள்ளிடம் ஆற்றில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அவர்கள் 4 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் கொளஞ்சிநாதனை மீட்புக்குழுவினர் மீட்டனர்.
மற்ற 3 பேரையும் திருவிடைமருதூர் தீயணைப்புத்துறை மீட்பு படையினர் ரப்பர் படகில் சென்று தீவிரமாக தேடினர். அப்போது மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் மனோஜ் மற்றும் ஆகாஷ் ஆகிய 2 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். ஆனால், தொடர்ந்து தேடியும் ராஜேசை கண்டுபிடிக்க முடியவில்லை.
8 நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்பு
இந்தநிலையில் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் மணல் திட்டுப்பகுதியில் ராஜேஷ் உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில், திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பழனிவேல், அரசு தலைமை கொறடா கோவி செழியன், சீர்காழி எம். எல்.ஏ. பன்னீர்செல்வம், கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ், ஒன்றிய குழு துணைத்தலைவர் பானுசேகர் மற்றும் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேசின் உடலை மீட்டு அவரது உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சீர்காழி அரசு டாக்டர் மூலம் அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ராஜேசின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 8 நாட்களுக்கு பிறகு ராஜேசின் உடல் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.