இறந்தவரின் உடலை நீர்நிலையில் சுமந்து செல்லும் அவலம்
கறம்பக்குடி அருகே பாதை வசதி இல்லாததால் இறந்தவர்களின் உடலை நீர்நிலைகளில் சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது. எனவே மயான பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பாசன குளம்
கறம்பக்குடி அருகே பட்டத்திகாடு ஊராட்சியை சேர்ந்த மயிலாடிதெரு கிராமம் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்கள் இறந்தால் அவர்களது உடலை எடுத்து செல்ல முறையான பாதை வசதி இல்லை. மயானத்திற்கு செல்ல கிரான்குளம் என்ற 50 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன குளத்தை தாண்டிதான் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்லவேண்டும்.
பாதை வசதி செய்து தருவதாக உறுதி
கடந்த ஆண்டு பெய்த கனமழையின்போது இந்த குளம் முழு கொள்ளளவை தாண்டி நிரம்பி இருந்தபோது அப்பகுதியில் இறந்த மூதாட்டியின் உடலை அவரது உறவினர்கள் நீந்தியபடி எடுத்து சென்றனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து அந்த கிராமத்திற்கு சென்ற அரசு அதிகாரிகள் மயானத்திற்கு செல்ல பாதை வசதி செய்து தருவதாக உறுதி அளித்து சென்றனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இறந்தவர் உடலை சுமந்து செல்லும் அவலம்
இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் குளத்தில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. இவ்வேளையில் அந்த கிராமத்தை சேர்ந்த சிவசாமி என்ற முதியவர் நேற்று இறந்தார். இதையடுத்து அவரது உடலை உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்றனர். பெரும் மழை பெய்து குளம் நிரம்பும் முன் மயான பாதை வசதி செய்து தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், வானம் பார்த்த பூமியான எங்கள் பகுதியில் மழை பெய்தால் பயப்படும் நிலைக்கு ஆளாகி உள்ளோம். 40 ஆண்டுகளாக இந்த நிலை தொடர்வது வேதனையாக உள்ளது. எனவே உடனடியாக மயான பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.