புதுப்பேட்டை அருகே தூக்கில் இளம்பெண் பிணம்: சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார்


புதுப்பேட்டை அருகே தூக்கில் இளம்பெண் பிணம்: சாவில் சந்தேகம் இருப்பதாக தம்பி போலீசில் புகார்
x

புதுப்பேட்டை அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண்ணின் தம்பி போலீசில் புகார் அளித்தார்.

கடலூர்

புதுப்பேட்டை,

தூக்கில் பிணம்

புதுப்பேட்டை அருகே அங்கு செட்டிப்பாளையம் புதுநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி ஜெயமாலா. இந்த தம்பதியின் 2-வது மகள் சத்தியபிரியா (வயது 21). ஐ.டி.ஐ. படித்துள்ள இவர் தாம்பரம் பகுதியில் உள்ள துணிக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விடுமுறையில் வீட்டிற்கு வந்தார்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் வீட்டின் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சத்தியபிரியா பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தூக்கில் பிணமாக கிடந்த சத்தியபிரியாவின் உடலை பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

கொலை மிரட்டல்

விசாரணையில், சத்தியபிரியாவின் தந்தை சக்திவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலம் பாதிப்பால் உயிரிழந்தார். இதனால் தாய் ஜெயமாலாவின் வளர்ப்பில் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கொங்கராயனூர் பகுதியை சேர்ந்த உறவினரான போலீஸ்காரர் ஒருவருக்கும் ஜெயமாலாவுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த போலீஸ்காரர் ஜெயமாலா, சத்தியபிரியா, இவருடைய தம்பி கிரி ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

போலீசார் விசாரணை

இதனால் மனமுடைந்த சத்தியபிரியா வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. இதையடுத்து சத்திய பிரியாவின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தினர்.

இதுகுறித்து அவரது தம்பி கிரி புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதில் தனது அக்காள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story