குளத்தில் இளம்பெண் பிணம்
வேதாரண்யம் அருகே குளத்தில் இளம்பெண் பிணம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே குரவப்புலம், வடகாடு கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். இவருடைய மகள் கலா (வயது 21).இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கலா வீட்டில் இருந்து மாயமானார். பின்னர் அவரது உறவினர்கள் கலாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள பால்வெட்டி குளத்தில் ஒரு பெண் பிணமாக கிடப்பதாக அந்த வழியாக சென்றவர்கள் வேதாரண்யம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் பசுபதி, சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் குளத்தில் பிணமாக கிடந்தது கலா என்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கலா குளத்தில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது விசாரணை நடத்தி வருகின்றனர்.