இறந்து கிடந்த சிறுத்தையின் உடல்பாகங்கள் சென்னையில் ஆய்வு


இறந்து கிடந்த சிறுத்தையின் உடல்பாகங்கள் சென்னையில் ஆய்வு
x
தினத்தந்தி 27 Aug 2022 9:46 PM IST (Updated: 27 Aug 2022 10:42 PM IST)
t-max-icont-min-icon

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் இறந்து கிடந்த சிறுத்தை உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அதே இடத்தில் எரிக்கப்பட்டது. உடல் பாகங்களை ஆய்வுக்காக சென்னை எடுத்து செல்லப்பட்டுள்ளதால் பரிசோதனை முடிவுக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார்.

வேலூர்

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே விவசாய நிலத்தில் இறந்து கிடந்த சிறுத்தை உடல் பிரேத பரிசோதனைக்கு பின் அதே இடத்தில் புதைக்கப்பட்டது.

உடல் பாகங்களை ஆய்வுக்காக சென்னை எடுத்து செல்லப்பட்டுள்ளதால் பரிசோதனை முடிவுக்கு பின்னரே இறப்புக்கான காரணம் தெரிய வரும் என மாவட்ட வன அதிகாரி தெரிவித்தார்.

சிறுத்தை இறப்பு

பேரணாம்பட்டு அருகே சேராங்கல் கிராமத்தில் வேணுமூர்த்தி என்பவருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில்நேற்று இரவு 7 மணியளவில் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது.

முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் இன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) நாக சத்தீஷ் கிடிஜாலா, சென்னை உயர் நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவன ஆய்வாளர் சுரேஷ் கோபி ஆகியோர் முன்னிலையில் மேல் பட்டி கால்நடை மருத்துவமனை டாக்டர் பவித்ரா, அரவட்லா கால் நடை உதவி மருத்துவர் தினேஷ் பாபு ஆகியோர் சிறுத்தை உடலை பிரேத பரிசோதனைசெய்தனர்.

பின்னர் அதே இடத்தில் சிறுத்தை உடல் பாதுகாப்பாக எரியூட்டப்பட்டது.

அதனை தொடர்ந்து மாவட்ட வன அதிகாரி (பொறுப்பு) நாகசத்தீஷ்கி டிஜாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

சிறுத்தை இறந்து கிடப்பதாக தகவல் அறிந்த உடனே விரைந்து வந்து ஆய்வு செய்து விசாரணை நடத்தினோம். இறந்த ஆண் சிறுத்தையானது 4 வயதிலிருந்து 5 வயதுக்குள்ளானது.

சிறுத்தையானது மின்வேலியில் சிக்கி இறக்கவில்லை. விஷம் கலந்த உணவு என வயிற்றில் எதுவுமில்லை. சிறுத்தை இறந்து 3 நாட்களுக்கு மேலானதால் எதுவும் சரியாக சொல்ல முடியவில்லை.

வேறு என்ன காரணம்?

சென்னை உயர் நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்தினர் சிறுத்தையின் உடல் பாகங்கள், தடயங்களை சேகரித்து ஆய்வுக்காக கொண்டு சென்றுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவு வந்த பின்னர் தான் சிறுத்தையின் இறப்புக்கான காரணம் என்ன என்பது தெரிய வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உதவி வன பாதுகாவலர் முரளிதரன் இருந்தார்.

கடந்த 7 ஆண்டுகளில் பேரணாம்பட்டு வனச்சரகத்தில் 3 சிறுத்தைகள் இறந்துள்ளன. எனவே சிறுத்தைகள் இறப்பதை தடுக்க வனத்துறை தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story