ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடல் மீட்பு
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடல் மீட்கப்பட்டது
கும்பகோணம் அருகே உள்ள கொரநாட்டு கருப்பூர் மேலத்தெருவை சேர்ந்த முஜிப் ரகுமான் மகன் சுலைமான் (வயது 18), பந்தநல்லூர் கருப்பூர் அக்ரகாரத்தை சேர்ந்த நாசர் மகன் முகமது நசீம்(18), நாச்சியார்கோவில் செம்மங்குடியை சேர்ந்த சாதிக்பாட்ஷா மகன் சாகுல்அமீது (18) ஆகிய 3 பேரும் கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்தனர். நேற்று முன்தினம் மதியம் உமா மகேஸ்வரபுரம் அருகே வீரசோழன் ஆற்றில் 3 பேரும் குளித்துக் கொண்டிருந்த போது தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் சாகுல்அமீது சிறிது தூரம் சென்ற நிலையில் கரையேறி விட்டார். மற்ற 2 பேரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை கும்பகோணம் தீயணைப்பு துறையினர் நீண்டநேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்று 2-வது நாளாக அவர்களை தேடும் பணி தொடர்ந்தது. அப்போது சிறிது தூரத்தில் சுலைமான் உடல் ஆற்றில் பிணமாக மிதந்தது அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மற்றொரு மாணவரான முகமது நசீனை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதற்கு மேல் இருட்டி விட்டதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது.