பெண்ணுடன் செல்போனில் பேசிய பொக்லைன் டிரைவருக்கு கத்திக்குத்து
பெண்ணுடன் செல்போனில் பேசிய பொக்லைன் டிரைவருக்கு கத்திக்குத்து விழுந்தது.
பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் கதிர்வேலு. இவருடைய மகன் சிவா (வயது 34). பெயிண்டர் வேலை செய்து வருகின்றார். இவரது மனைவி லோகேஸ்வரி. இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான். அதே பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் (30). பொக்லைன் டிரைவர். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கோபிநாத், அடிக்கடி லோகேஸ்வரி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார். இந்த தகவல் லோகேஸ்வரியின் கணவர் சிவாவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிவா, கந்தனேரி பகுதியில் பொக்லைன் எந்திரம் ஓட்டிச்சென்ற கோபிநாத்தை தடுத்து நிறுத்தி, தனது மனைவியிடம் பேசியது குறித்து கேட்டு என் மனைவியின் செல்போனில் இனி பேசக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த சிவா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோபிநாத்தை குத்தி உள்ளார். இதில் செய்துள்ளார். இதில் கோபிநாத்திற்கு காயம் ஏற்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கொடுத்த புகாரின் பேரில் பள்ளிகொண்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப் பதிவு செய்து சிவாவை கைது செய்தார்.