பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஓய்வுபெற்ற பேராசிரியர் உள்பட 3 பேரிடம் சேலம் போலீசார் விசாரணை
பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் உள்பட 3 பேரிடம் சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் உள்பட 3 பேரிடம் சேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. இதை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் கடிதம் எழுதியவர்கள் யார்? என்பது குறித்து மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்த கடிதம் சேலம் மாவட்டத்தில் இருந்து ஒருவர் எழுதி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சேலம் வடக்கு சரக போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி தலைமையில் மத்திய புலனாய்வு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் சேலம் மாவட்டம் ஏற்காடு மெயின்ரோடு ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வரும் ஓய்வுபெற்ற பேராசிரியர் பழனிசாமி (வயது 85) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக தெரிகிறது.
3 பேரிடம் விசாரணை
இது குறித்து போலீசாரிடம் கேட்ட போது 'பிரதமர் அலுவலகத்துக்கு எழுதப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் கடிதம் குறித்து ஓய்வுபெற்ற பேராசிரியர் பழனிசாமியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினோம். அவர் சரியான பதில் கூறவில்லை. இருப்பினும் பழனிசாமி மற்றும் 2 பேர் என மொத்தம் 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.