ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
x

சென்னை வந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

ஐதராபாத்தில் இருந்து சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்துக்கு செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஐதராபாத் விமான நிலையத்துக்கு மிரட்டல் வந்தது. அப்போது அந்த விமானம் ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டது தெரிந்தது. இதுபற்றி சென்னை விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஐதராபாத்தில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சென்னை விமான நிலையத்துக்கு காலை 11.30 மணிக்கு வந்தது. விமான நிலையத்தில் தயாராக இருந்த பாதுகாப்பு வீரர்கள், மத்திய தொழில்படை போலீசார் இணைந்து மோப்ப நாய் உதவியுடன் விமானத்தில் ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதும், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனவும் தெரியவந்தது.

கைது

அந்த விமானம் சென்னையில் இருந்து மதியம் 12.15 மணிக்கு மீண்டும் ஐதராபாத் புறப்பட்டு செல்ல வேண்டும். ஆனால் வெடிகுண்டு சோதனைகள் முடிந்த பிறகு 3 மணிநேரம் தாமதமாக மாலை 3 மணிக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையில் ஐதராபாத் போலீசார், மிரட்டல் வந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போது, தான் சென்னை செல்ல வேண்டிய விமானத்தை தவற விட்டதால் ஆத்திரத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பயணி ஒருவர் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து கொண்டே வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை ஐதராபாத் போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

இண்டிகோ நிறுவனத்துக்கு ெசாந்தமான விமானம் ஒன்று நேற்று தலைநகர் டெல்லியில் இருந்து ஒடிசாவின் தியோகர் நகருக்கு புறப்பட்டது. இந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

இந்த விமானம் உத்தரபிரதேச வான்பரப்பில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

எனவே உடனடியாக அந்த விமானம் லக்னோவுக்கு திருப்பி விடப்பட்டது. அங்கே தரையிறங்கிய விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டனர்.

அதிகாரிகள் நிம்மதி

பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து விமானம் முழுவதும் சல்லடை போட்டு தேடினர். ஆனால் சந்தேகப்படும் வகையிலான பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதன்மூலம் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விமானம் அங்கிருந்து கிளம்பி தியோகருக்கு புறப்பட்டு சென்றது. அதன் பின்னரே அதிகாரிகளும், பயணிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

பெரும் பரபரப்பு

எனினும் இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையே விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தை பாதுகாப்பு நிறுவனங்கள் தீவிரமாக விசாரித்து வருகின்றன.

இந்த தகவல்களை இண்டிகோ நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளது.

எனினும் விமானத்தில் இருந்து பயணிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட மேலதிக விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.


Next Story